Editorial / 2018 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தேசிய அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டு இணக்க அரசியல்செய்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுத்துள்ளதா எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, நல்லாட்சியின் எதிர்க்கட்சி சாதித்தது என்னவென வினவியுள்ளார்.
இதுவரை அரசியல் கைதிகள் விடயத்தில் என்ன முன்னேற்றத்தைக் கண்டார்கள்? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் ஒரு தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது. அதைப்பற்றி சம்மந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் இருப்பதன் மர்மம் என்ன? போரால் பாதிக்கப்பட்டவர்களும், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளும் வறுமையில் வாடுகின்றார்கள். அவர்களுக்கான திட்டங்கள் எதையாவது வைத்துள்ளார்களா? என்றும் வினவியுள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (15) அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வெறுமனே தங்களால்தான் இந்த அரசாங்கம் அமைந்தது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, பேரம் பேசி அரசியல் செய்யத் தெரியாமல் சோரம் போய்விட்டார்கள் என்று மக்கள் தலையில் அடித்துக் கதறுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் காதுகளில் கேட்கவில்லையா?
தமிழரசுக் கட்சியின் சர்வாதிகாரப் பிடிக்குள் சிக்கிக் கொண்ட பங்காளிக் கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையை ஏன் வேடிக்கை பார்த்தார்கள்?” என்றும் கேட்டுள்ளார்.
யுத்தம் பற்றிப் பேசுவதற்கு இந்திய அரசு அழைத்தபோது, எதற்காகத் தட்டிக் கழித்தார்கள்? யுத்த நிறுத்தம் ஏற்பட்டால் தங்களின் பதவிக் கனவுகள் தவிடுபொடியாகிவிடும் என்பதால், மக்கள் அழிந்தாலும் சரி, விடுதலைப் புலிகள் வீழ்ந்தாலும் சரி, வாய்திறக்கக் கூடாது என மௌனவிரதம் இருந்தவர்களிடமே மீண்டும் மக்கள் நம்பிக்கை வைத்ததன் விளைவு, இன்று அவர்களுக்குச் சாதகமாகிவிட்டது. மௌனமாக இருந்தால்தான் மக்கள் மீண்டும் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விட்டது. எனவேதான் மௌனமாக இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள். இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் காலம் வந்து விட்டது. சகலரும் ஒன்றிணைந்து சர்வாதிகார தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டிய தருணம் வந்து விட்டது என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago