2026 மார்ச் 04, புதன்கிழமை

‘பொன்சேகாவை வெளியேற்றுக’

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நேற்றுக் கோரினார். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக, அமைச்சர் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே, இந்தக் கருத்தை, விமல் வீரவன்ச முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை, அமைச்சர் பொன்சேகா மீறிவிட்டார் எனவும், விஜயதாச ராஜபக்‌ஷவைப் போன்றே, அமைச்சர் பொன்சேகாவும் நீக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் பொன்சேகாவின் கருத்து, ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கருத்து என வேறு யாராவது எண்ணினால், அவர்கள் மீது தவறு கூற முடியாது எனவும், அவர் குறிப்பிட்டார்.

“அமைச்சர் மீது, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேணடும். ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் விற்பனை தொடர்பில் கருத்துத் தெரிவித்தமைக்காக, முன்னாள் அமைச்சர் விஜயதாச நீக்கப்பட்டார். தேசத்துரோகம் மிகுந்த கருத்தை வெளிப்படுத்தியமைக்காக, அமைச்சர் பொன்சேகா ஏன் நீக்கப்படக்கூடாது?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக, அமைச்சர் பொன்சேகாவிடம் ஆதாரங்கள் இருந்தால், சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, பொலிஸாரிடம் அவர் முறையிட்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்த விமல் வீரவன்ச, அதைவிடுத்து, முழு உலகமும் அறியும் வண்ணம், பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.  அத்தோடு, இவ்வாறான நடவடிக்கைகளுக்காக, முன்னர் பல இராணுவ வீரர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர் எனவும், அவர் குறிப்பிட்டார்.

“ஜயசூரியவுக்கு எதிராக, சனல் 4 தொலைக்காட்சியும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. பொன்சேகாவின் குற்றச்சாட்டுகள், அவ்வாறான மோசமான நடவடிக்கைகளுக்கு, ஊக்குவிப்பு வழங்கும். முறைப்பாடுகள் காணப்பட்டால், தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வழிகள் உள்ளன. இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவது, அவரது கடமையோ அல்லது பொறுப்போ கிடையாது” என, வீரவன்ச குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம், சிறுபான்மைக் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிய அவர், இராணுவத்தைத் தாக்கிக் கொண்டு, சிறுபான்மைக் கட்சிகளைத் திருப்திப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை, அரசாங்கம் எடுக்கிறது எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .