2026 ஜனவரி 14, புதன்கிழமை

றோகிஞ்சா அகதிகள் விவகாரம்: இருவரை கண்டால் அழைக்கவும்

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மார் றோகிஞ்சா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், கொழும்பு குற்றப்பிரிவால் தேடப்பட்டு வருகின்றவர்களில் இருவர் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  

அதில், கிருலப்பனை பூர்வாராம விஹாரையைச் சேர்ந்த, அருவோபொல ரத்னசார தேரர் முதலாவது சந்தேகநபராவர். இரண்டாவது சந்தேகநபர், வாதுவை,மஹாவாதுவைச் சேர்ந்த பீகின் ஜானக குணதிலக்க என்பவராவார் என்றும் தலைமையகம் விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதில், இரண்டாவது சந்தேகநபர், இலங்கை பொலிஸில் கடமையாற்றிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். அவர், கடமையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், அவருக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   

அதில், ஒரு வழக்கு, முஸ்லிம் பள்ளிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு, சேதங்களை விளைவித்த சம்பவங்களுடன் தொடர்புடையதாகும். மற்றைய வழக்கு, பாணந்துறை மகளீர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை அச்சுறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாகும் என்றும் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேற்குறிப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும். தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவ்விருவர் தொடர்பிலான, தகவல் கிடைக்குமாயின், 071-8591727 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, கொழும்பு குற்றப்பிரிவு பணிப்பாளருடன் தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மியான்மார் றோகிஞ்சா 30 பேரும், காங்கேசன்துறை கடலுக்கு அண்மையில் வைத்து, கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியன்று இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.   

அவர்கள், கல்கிஸையில் உள்ள வீட்டில், தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அந்த வீட்டை கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று சுற்றிவளைத்த பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் பெரும் களேபரத்தில் ஈடுபட்டனர்.  

இந்தச் சம்பவத்தையடுத்து, பெண்ணொருவர் உட்பட அறுவர், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர். அதில், நான்கு பேர், நீதிமன்ற உத்தரவின் பேரில். எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில், கொழும்பு குற்றப்பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்கு, அக்மீமன தயாரத்ன தேரர், திங்கட்கிழமை (02) சென்றிருந்தார். அவரிடம் நீண்ட நேர விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவினர் அவரைப் பின்னர் கைதுசெய்தனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான, அக்மீமன தயாரத்ன தேரர், கல்கிஸை பிரதான நீதிமன்ற நீதவான் மொஹமட் வஹாப்தீன், முன்னிலையில் அன்றுமாலை ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

இதேவேளை, கல்கிஸை பொலிஸாரின் ​பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட மியான்மார் றோகிஞ்சா 30 பேரும், காலி பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .