Editorial / 2017 ஒக்டோபர் 05 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவநிரோஷனி
காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடக்கில் முன்னெடுத்துவரும் போராட்டமானது நியாயமானதே எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(04) இடம்பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, சிறைச்சாலைகளில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியத்தருமாறு அவர்கள் கேட்கின்றனரே தவிர காணாமல் போனவர்களை தேடித்தாருங்கள் என்று கேட்கவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்பது நியாயமானதாகவே நான் கருதுகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“வடக்குக்கு, அண்மையில் சென்று அவர்களை சந்தித்த போது இதற்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என கூறினேன். தொடர்ந்தும் இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனஞ்செலுத்தி வருகிறது” என அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கில் மக்களது காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்களே, அவர்களது பிரச்சினையை அரசாங்கம் தீர்க்காமல் இருப்பது ஏன்? என்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
“பசில் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் சென்றிருந்தபோது இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கூறியிருந்தார். உண்மையில் அவர் கூறியது வரவேற்கத்தக்கது தான். ஏனென்றால் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இபபோது அவற்றை விடுவிக்கக் கோருகின்றனர்” என்றார்.
“பசில் ராஜபக்ஷ கூறியதை மஹிந்த ராஜபக்ஷ அன்று செவிசாய்த்திருந்தால் மஹிந்தவின் ஆட்சி இன்று வரை தொடர்ந்திருக்கும். அவர் கோட்டாபய ராஜபக்ஷ கூறிய யோசனைகளைக் கேட்டதாலேயே இன்று இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்” எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,
கேள்வி: மியான்மார் நாட்டிலிருந்து வருகைதந்த றோகிஞ்சா அகதிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பதில்: றோகிஞ்சா அகதிகள் மட்டுமல்லாது நாட்டுக்கு வருகைதந்தவர்களில் 1,333 பேர் உள்ளனர். இவர்களில் அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்களும் புகலிடக் கோரிக்கையாளர்களும் உள்ளனர். இவர்களை ஐக்கிய நாடுகள் ஆணையகம் கவனித்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் பொறுப்பிலேயே அவர்கள் உள்ளனர். எல்லா நாடுகளும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர்கள் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் பல அவர்களை பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கேள்வி: மின்சார கட்டமைப்பை விரிவுபடுத்த 18 மில்லியன் ரூபாய் செலவில் புதிய ஜெனரேடர்கள் கொள்வனவு செய்ய வேண்டியதன் தேவைப்பாடு என்ன ,நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு அது அவசியமா?
பதில்: நாட்டின் காலநிலையை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், முன்னர் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு அமையவே இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
கேள்வி: ஸ்ரீலங்கன் எயார் விமான சேவைக்கு 100 கோடி ரூபாய் கடன் வழங்குவதாகக் கூறப்பட்டதே?
பதில்: அப்படியொன்றும் இல்லை.
கேள்வி: புகையிரத பாதைகளை விரிவாக்கம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எத்தனை குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வௌியெற்றப்படுகின்றனர், அவர்களை மீள குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்- இது குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீள் குடியமர்த்தப்படுவார்கள் .
கேள்வி: புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறேவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறதா?
பதில்- அரசமைப்பின் இடைக்கால அறிக்கையில், அரசியல் கட்சிகளின் யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையைத் தக்க வைத்துக்கொள்வதாக அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தலா என்பது தொடர்பில் இதுவரை தீர்வு ஒன்றும் எடுக்கப்படவில்லை. அரசியல் கட்சிகளின் யோசனைகள் யாவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி ஆவணம் தயாரிக்கப்படும்.
1978ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் எனக் கூறிவந்தது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை அவ்வாறே இருக்க வேண்டும் எனக் கூறியது. பின்னர் 2002ஆம் ஆண்டில் தமது கருத்தை ஐ.தே.க மாற்றிக்கொண்டது.
மேலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையானது நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கேள்வி: அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய பதவி விலகியமைக்குக் காரணம் என்ன? புதிதாக ஒருவர் எப்போது நியமிக்கப்படுவார்?
பதில்: பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தனது தனிப்பட்ட பொருளாதார காரணங்களுக்காக பதவி விலகினார். அவர் ஒருவருடம் மாத்திரமே பதவி வகிப்பதாக கூறியிருந்தார்.
22 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago
9 hours ago