Kogilavani / 2017 ஜூன் 02 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக, விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது அரசாங்கம் விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றி கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
காலி மாவட்ட செயலகத்தில் நேற்று (01) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு விசேட குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்குப் பின்னராவது மக்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து, அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மாவட்டங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சாத்திய வள ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் முயற்சி எடுத்த போதிலும் சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக அந்தச் செயற்பாடுகள் தடைப்பட்டன.
நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடக நிறுவனங்கள், கொடையாளர்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களுக்கும் ஜனாதிபதி, இந்த கூட்டத்தின் போது நன்றி தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக உதவித் திட்டங்களை அமுல்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.
மக்கள் அதிக நாட்கள் முகாம்களில் தங்கியிருக்க முடியாது என்பதனால் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறும், உதவிச் செயற்பாடுகளின் முன்னுரிமையை இனங்கண்டு செயற்படுமாறும் குறிப்பிட்டார்.
வெள்ளம் வடிந்த பின்னர் கிணறுகளைத் துப்புரவு செய்வதற்கான நீர்ப்பம்பிகளை அரசாங்கத்தால் வழங்குமாறும், மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக இலவசமாக வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
மக்களுக்குத் தேவையான உலர் உணவு உள்ளிட்ட பொருட்களை பகிர்ந்தளிக்கும் போது அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்ளாமல், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அலுவலர்கள் ஊடாக அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
மாவட்ட வீதிகள், பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் விரைவாக மேற்கொள்ளக்கூடிய திருத்த வேலைகள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்கும் செயற்பாடுகளை முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுமாறும் அவர் கூறினார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago