Suganthini Ratnam / 2011 மார்ச் 28 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிபந்தனையற்ற அடிப்படை சம்பளமாக ரூபா ஐந்நூறுடன், மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவாக ரூபா இருநூற்றம்பதையும் சேர்த்து மொத்த நாட் சம்பளமாக ரூபா 750 தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க, தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உடன்பட வேண்டும். பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே தேசிய ஊடகங்களில் நஷ்ட கணக்கு காட்ட தொடங்கியிருக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் மலையக தமிழ் கூட்டமைப்பின் இணைத்தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலே இன்னுமொரு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகப் போகின்றது. தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் ஐக்கிய தேசிய கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்க கூட்டு கமிட்டியும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எவர் என்பது தொடர்பில் எங்களுக்கு அக்கறை கிடையாது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் சம்பள தொகை தொடர்பில் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றோம். சம்பள பேச்சுவார்த்தையில் நேரடியாக கலந்துகொள்ளாத அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இது தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாமல் தத்தளிக்கும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்.
பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்குள் தோட்ட முதலாளிமார் சம்மேளம் தேசிய ஊடகங்களில் நஷ்ட கணக்கு காட்ட ஆரம்பித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளனம் என்ற தகைமையையும் மீறிச்சென்று, தோட்டத் தொழிலாளர்களின் சமூக பொருளாதார வாழ்க்கையை பற்றி பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலே வறுமை குறைந்துள்ளதாகவும், அவர்களது வாழ்க்கையில் வளமை ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. பெருந்தோட்டத்துறையில் வறுமை விகிதம் அதிகரித்து செல்வது நாடறிந்த சங்கதியாகும். கடந்த 20 வருடங்களில் தேசிய ரீதியாக வறுமை விகிதம் சரிபாதியாக குறைந்துவிட்ட நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மாத்திரம் அது அதிகரித்து செல்கின்றது. சில தேசிய ஊடகங்கள் மூலமாக முதலாளிமார் சம்மேளம் முன்னெடுக்கும் இத்தகைய உண்மையற்ற பரப்புரையை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
மேலும் கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்பட்ட நலவுரிமை சேவைகள் எதுவும் தற்பொழுது வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் சமூக நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்ட டிரஸ்ட் என்ற அறக்கட்டளைக்கு தோட்ட கம்பனிகள் சட்டப்படி வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை கிரமமாக வழங்குவதில்லை. அத்துடன் தோட்ட கம்பனிகள் தனியார் உடைமையாக்கப்பட்ட பொழுது தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பங்குகளின் இலாபம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தோட்ட நிறுவனங்கள் உற்பத்திக்கு ஒரு நிறுவனத்தையும், ஏற்றுமதிக்கு வேறு நிறுவனத்தையும் நடத்திவரும் தந்திரம் எங்களுக்குத் தெரியும். ஒரு நிறுவனத்தின் பெயரில் உற்பத்தி செய்துவிட்டு மிகக்குறைந்த இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேயிலை விற்பனை செய்யப்படுகின்றது. அதன் பின்னர் இந்த தேயிலை பெரும் இலாபத்துடன் ஏற்றுமதி நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆனால் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் கணக்குகளையே சம்பள பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனம் பயன்படுத்துகின்றது. அதேபோல் முதலாளிமார் சம்மேளனமும் கையெப்பமிடும் தொழிற்சங்கங்களும் மார்ச் மாத இறுதியிலிருந்து சுமார் 6 மாதங்களுக்கு பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கின்றார்கள். பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் 6 மாதங்களுக்கான நிலுவை சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த நிலுவை சம்பளத்திற்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படுவதில்லை. கடந்த முறை இத்தகைய கொடுப்பனவாக சுமார் 25 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. இது இந்நாட்டு தொழிற்சட்டங்களை மீறும் அத்துமீறிய சட்டவிரோத செயலாகும். இதற்கு கையெழுத்திடும் தொழிற்சங்கங்களும் துணைபோகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் அனைத்து கோணத்திலும் தங்களுக்கு அதிக பட்ச இலாபத்தை பெற்றுக்கொண்டு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தையும் வழங்க மறுப்பதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு நாம் இடந்தர முடியாது. எனவே நிபந்தனையற்ற அடிப்படை சம்பளமாக ரூபா ஐந்நூறுடன், மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவாக ரூபா இருநூற்றம்பதையும் சேர்த்து மொத்த நாட்சம்பளமாக ரூபா 750 தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க, தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உடன்படவேண்டும். இதற்கு உடன்பாடு காணப்பட முடியாவிட்டால், அதற்கான காரணங்களை முதலாளிமார் சம்மேளம் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். சில தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடட்டும். ஆனால் தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பிலான அனைத்து விவகாரங்களையும் அவர்களிடம் மாத்திரம் ஒப்படைத்துவிட்டு நாம் அமைதியாக வேடிக்கை பார்க்கப்போவதில்லை.
25 minute ago
29 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
38 minute ago
44 minute ago