2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

இளைஞன் பலி; நடித்தவர் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா தள வைத்தியசாலையில் வாந்தி எடுப்பதாகக் கூறி, வியாழக்கிழமை (08) இரவு, அனுமதிக்கப்பட்ட இளைஞன், நேற்று (09) மாலை உயிரிழந்ததையடுத்து குறித்த இளைஞனை வைத்தியாசாலையில் அனுமதித்த நபரை, கிண்ணியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உயிரிழந்தவர், மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த அன்ஸார் மப்ரி (வயது 19) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கிண்ணியா மத்திய மகா வித்தியாலத்துக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞன் மீது, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் மோட்டார் சைக்கிள் கொண்டு மோதியுள்ளார்.

இதன்போது, கீழே விழுந்த இளைஞன் தொடர்ச்சியாக வாந்தியொடுத்ததையடுத்து, மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர், வைத்தியசாலையின் வீதியில் இளைஞன் வாந்தியெடுப்பதைக் கண்டு அழைத்து வந்ததாக, நல்லவர் போன்று நடித்து, கிண்ணியா தள வைத்தியசாலையில் இளைஞனை அனுமதித்துள்ளார்.

இளைஞன், உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் விபத்து பற்றித் தெரிவிக்காத நிலையில் வாந்தி எடுப்பதாக அழைத்து வந்த நபர் வழங்கிய தகவலையடுத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.

இவ்வேளையில் தொடர்ந்தும் வாந்தி எடுப்பதை அவதானித்த வைத்தியர், தலையை ஸ்கேனிங் செய்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும் அதில் தலைப்பகுதியில் இரத்தம் கசிவதாகவும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் அங்குள்ள வைத்திய நிபுணர் சத்திரசிகிச்சை செய்தும் தப்ப வைக்க முடியாது மீண்டும் கிண்ணியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் பணித்துள்ளார்.

இதேவேளை, கிண்ணியா தள வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வேளை இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் மரணம் தொடர்பில் வாந்தி எடுப்பதாக அழைத்து வந்த நபரைக் கைதுசெய்து, விசாரணை செய்த போது, மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் அதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக,  கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .