2021 மே 15, சனிக்கிழமை

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு மீளவும் பொலிஸ் பாதுகாப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 25 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், பைஷல் இஸ்மாயில், வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்                

எந்தவித முன்னறிவித்தலுமின்றி கிழக்கு மாகாணசபை  உறுப்பினர்களுக்கு நீக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீண்டும் செவ்வாய்கிழமை (24) மாலை வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபை அமர்வு பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை  காலை கூடியது.  இதன்போது, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டமை  தொடர்பில் அவசர பிரேரணையை மாகாணசபை உறுப்பினர்களான சிப்லி பாறூக் மற்றும்  எம்.எஸ்.உதுமாலெப்பையும் முன்வைத்தனர்.

இந்நிலையில், இந்தப் பிரேரணை தொடர்பில் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோ கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு  நீக்கப்பட்டமையைக் கண்டிப்பதுடன், அவர்களுக்கு மீளவும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென   உரையாற்றிக்கொண்டிருந்தார்.  அவரது உரையுடன், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்து, சபை நடவடிக்கைகளை பகிஷ்கரித்து சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியதுடன், சபையும் அரை மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனை அடுத்து, கிழக்கு மாகாண முதலமைச்சரின் கேட்போர் கூடத்தில் சமரசக் கூட்டம் நடைபெற்றபோது,  சபை அமர்வை முரண்பாடுகளின்றி நடத்துவதற்கு ஒத்துழைப்பதாக தீர்மானிக்கப்பட்டதைத்  தொடர்ந்து  கிழக்கு மாகாணசபையின் அமர்வு மீண்டும் கூடியது. இந்நிலையில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு நீக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் முயற்சியால் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு மீளவும்   பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரும் உறுதிப்படுத்தினார்.
 
 
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .