2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வீதியொன்றுக்கான பெயர்ப்பலகை இரவில் திரைநீக்கி மறுநாள் நீக்கம்

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ. ஹலீம்

கிண்ணியாவில் அமைந்துள்ள வீதியொன்றின் பெயர்ப்பலகையொன்று, நேற்று (03) இரவு திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட போதிலும், இன்றைய (04) தினமே, அது அகற்றப்பட்டது.

கிண்ணியா நகர சபையின் அனுமதியின்றி, அப்பெயர்ப்பலகை அமைக்கப்பட்டதாலேயே அது அகற்றப்பட்டது என, கிண்ணியா நகர சபைத் தகவல்கள் தெரிவித்தன.

கிண்ணியா நகர சபைக்குள் அமைந்துள்ள சின்னக் கிண்ணியா பகுதியிலுள்ள "மத்ரஸா ஒழுங்கை" என்றழைக்கப்படும் வீதிக்கான பெயர்ப்பலகையே, வீதி அபிவிருத்தி அதிகாரசபையால், "மத்ரஸா ஒழுங்கை" என்ற பெயரில், திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டிருந்தது. எனினும் அப்பெயர்ப்பலகை, நகர சபையால் இன்று அதிரடியாக நீக்கப்பட்டது.

குறித்த வீதியின் பெயர், "இசாக் சேர் வீதி" என அழைக்கப்பட வேண்டுமென, நகர சபையால் தீர்மானமெடுக்கப்பட்டுள்ள நிலையிலும், நகர சபையுடன் கலந்துரையாடாமலேயே, குறித்த வீதிக்கான பெயர்ப்பலகை திடீரென நிறுவப்பட்டது எனவும் தெரிவித்து, குறித்த பெயர்ப்பலகை நீக்கப்பட்டது.

பெயர்ப்பலகை திறந்துவைக்கப்படும் நிகழ்வில், முன்னாள் தவிசாளர் ஹில்மி மஹரூஃபும் கலந்துகொண்டார் எனத் தகவல்கள் தெரிவித்த நிலையில், அது தொடர்பில் அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அந்நிகழ்வில் பார்வையாளராகக் கலந்துகொண்ட போதிலும், அதைத் திரைநீக்கம் செய்திருக்கவில்லை எனவும், உரிய அனுமதிகளைப் பெறுமாறு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு அறிவுரை வழங்கியதாகவும், அவர் குறிப்பிட்டார்.

அவ்வீதியை, "இசாக் சேர் வீதி" எனப் பெயர்மாற்றம் செய்யுமாறு, தான் தவிசாளராக இருந்த காலப்பகுதியிலும் முடிவெடுக்கப்பட்டு, முதலமைச்சரின் அனுமதிக்காக அனுப்பிய போதிலும், அம்முயற்சி வெற்றிபெற்றிருக்கவில்லை எனவும், தற்போதைய நிலையிலும், "இசாக் சேர் வீதி" என்ற பெயர், வர்த்தமானியில் இன்னமும் பிரசுரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக, நகர சபையின் தற்போதைய தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, சபையின் அனுமதியின்றி குறித்த பெயர்ப்பலகை இடப்பட்ட காரணத்தாலேயே, அப்பெயர்ப்பலகையை நீக்க வேண்டியேற்பட்டது என்று தெரிவித்தார். அத்தோடு, "இசாக் சேர் வீதி" என்ற பெயர் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், குறித்த வீதிக்கான பெயர்ப்பலகை திறந்துவைக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .