2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

எட்டுவருடங்களாகியும் நிரந்தர வீடில்லை: மூதூர் மக்கள் விசனம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


சுனாமி பேரலையினால் பாதிப்புக்குள்ளான மூதூர் கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த 80இற்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கு எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எவரும் முன்வர வில்லையென விசனம் தெரிவிக்கப்படுகிறது.

சுனாமி அனர்த்தத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மூதூர் பிரதேசமும் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் மிகவும் இழப்புக்களைச் சந்தித்தது தக்வா நகர், ஹபீப் நகர் மற்றும் பஹ்ரியா நகர் ஆகிய முஸ்லிம் கிராமங்களேயாகும். இக்கிராமங்களில் மட்டும் 250இற்கும் அதிகமானோர் இறந்தும்; 1000இற்கும் அதிகமானோர் காயத்திற்கும் உள்ளாகினர். குடிமனைகள் யாவும் முழுமையாக அழிவடைந்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஓரு தொகுதியினருக்கு மட்டும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள அதேவேளை, 80இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக கொட்டிலுக்குள் முடங்கிக்கிடக்கும் அவலநிலை எட்டு வருடங்களாகத் தொடர்கிறது.

சுனாமியினால் உறவுகளையும் உடைமைகளையும் அத்தோடு, வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ள தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் பல முறை மன்றாடிக் கேட்டபோதும்  அவர்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்;.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட போது ஆறு மாதங்கள் வரை தற்காலிகமாக குடியிருப்பதற்கென தன்னார்வத் தொண்டு நிறுவனங்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தகரக் கொட்டில்கள் முற்றாக சேதமடைந்த நிலையிலும் வேறு வழியில்லாததினால் அவற்றுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கும் இம்மக்கள் நிரந்தரவீட்டை அமைத்துத் தருமாறு மனிதாபிமானத்தின் பெயரால் கோரிக்கை விடுக்கின்றனர்.

எட்டு வருடங்களாக நிரந்தர வீடுகள் இல்லாது சின்னஞ் சிறிய தகரக் கொட்டில்களுக்குள் வாழ்கை நடத்திவரும் இக்குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ளதாகவும் மேலும் அத்தகைய சில குடும்பங்களில் பெண்பிள்ளைகளும் சிறுவர்களும் அயல் வீடுகளில் சென்று உறங்குவதினால் ஒழுக்கக் கேடுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  Comments - 0

  • MN. Mohamed Irshath Tuesday, 01 January 2013 09:31 AM

    உடைப்பவர்களிடம் கட்டிக்கேட்பதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .