2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா முஸ்லிம் ஆசிரியர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவில் ஏன் பாகுபாடு?: இம்ரான் மஹ்ரூப் கேள்வி

George   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல்பரீத்
 
கிண்ணியா கல்வி வலயத்தில் முஸ்லிம் ஆசிரியர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர் என்பதற்காகவா அவர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என, செவ்வாய்க்கிழமை(21) நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினர். 
 
கிண்ணியா கல்வி வலய ஆசிரியர்களுக்கு 2007 ஜனவரி முதல் 2007 டிசம்பர் வரையான காலப் பகுதிக்கு கொடுக்க வேண்டிய கஷடப் பிரதேச கொடுப்பனவு நிலுவை, இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
 
அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
 
இக்காலப் பகுதிக்கான கஷ்டப் பிரதேசக் கொடுப்பனவு நிலுவை கந்தளாய், மூதூர், திருகோணமலை கல்வி வலய ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிண்ணியா கல்வி வலய ஆசிரியர்களுக்கு மட்டும் இது வழங்கப்படவில்லை. ஒரே மாவட்டத்தில் ஏன் இந்தப் பாகுபாடு?
 
இது குறித்து அங்குள்ள ஆசிரியர் சங்கங்கள், அதிபர் சங்கம் என்பன கல்வி பகுதியின் சகல மட்டங்களுக்கும் பலமுறை வேண்டுகோள்கள் முன் வைத்துள்ளன. எனினும் 7 வருடங்கள் கழிந்தும் எந்த ஒரு மட்டத்திலிருந்தும் இதுவரை திருப்தியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
 
கிண்ணியா என்னுடைய சொந்த ஊர் மட்டுமல்ல. எங்களது முதலமைச்சருடைய ஊரும் தான். அவர் இக்காலப் பகுதியில் கூட்டுறவு அமைச்சராக இருந்துள்ளார். அதன் பின் ஜனாதிபதியின் ஆலோசகராக இரண்டு வருடங்கள் இருந்துள்ளார். இப்போது இரு வருட காலமாக முதலமைச்சராக இருக்கிறார்.
 
எனினும், இந்தக் கொடுப்பனவு விடயத்தில் திருப்தியான பதில் கிடைக்காததால் அதிகமான அதிபர்களும், ஆசிரியர்களும் என்னைத் தொடர்ச்சியாக சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். எனவே, கல்வி அமைச்சர் இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி கொடுப்பனவு நிலுவையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
இதற்குப் பதிலளித்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாயநாயக்க, 'இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே ஒரு மாத காலத்துக்குள் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .