2025 ஜூலை 12, சனிக்கிழமை

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார் பெரு நாட்டின் லோசா...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெரு நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசா (வயது 74), 2010ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். இந்நிலையில், அரசியல் அதிகாரம் குறித்த அவரது அலசல், தனிநபர் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் நிலை, அதில் அவர்கள் அடையும் தோல்விகள், புரட்சிகள் குறித்து மிகுந்த ஞானத்துடன் எழுதி வருபவர் என நோபல் பரிசை வென்றுள்ள லோசாவை நோபல் பரிசுக் குழு புகழாரம் சூட்டியுள்ளது.

லோசா எழுதியுள்ள 30க்கும் மேற்பட்ட நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளில் "கன்வர்சேஷன் இன் கதீட்ரல்", "த கிரீன் ஹவுஸ்" போன்றன பிரபலம் வாய்ந்தவை. 1960களில் இவர் எழுதிய "த டைம் ஒப் த ஹீரோ" என்ற நாவல், உலகளவில் லோசாவுக்கு பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்தது.

பெரு நாட்டு இராணுவ நிறுவகத்தில் தான் சந்தித்த அனுபவங்களை இதில் உள்ளடக்கியுள்ளார். இராணுவ நிறுவகத்தின் அடக்குமுறைகளை உள்ளடக்கிய இந்த நூல் காரணமாக பெருவில் பெரும் பிரளயம் ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான நூல்களை குறித்த நிறுவகத்தின் முன் இராணுவ அதிகாரிகளினால் தீயிடப்பட்டதுடன் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

பெருவின், அரிக்யூபாவில் பிறந்தவர் லோசா. இவரது பெற்றோர் விவாகரத்து பெற்றதால் பொலிவியாவில் தனது தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தார். பின்னர் 1946இல் மீண்டும் பெரு திரும்பினார்.அங்கு இராணுவப் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் லிமா மற்றும் மாட்ரிட் நகரங்களில் இலக்கியம் மற்றும் சட்டம் பயின்றார்.

1959இல் பாரீஸுக்கு இடம் பெயர்ந்த லோசா, மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். ஏ.எப்.பி எனப்படும் செய்தி நிற்வனத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய அவர் பிரான்ஸ் தொலைக்காட்சியிலும் தொழில் புரிந்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகவும் பணியாற்றிய அவர், தற்போது  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமையாற்றி வரிகின்றார்.

இந்நிலையில், 1990ஆம் ஆண்டு பெரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அல்பர்டோ பிஜிமோரியிடம் தோல்வியுற்ற லோசா, பின்னர் சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் மீதான அடக்குமுறைகளை தைரியமாக தட்டிக் கேட்கும் புரட்சிவாதியாகவும் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1982ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை தென் அமெரிக்கரான கொலம்பியாவின் காப்ரியல் கார்சியா பெற்றிருந்தார். அதன் பின்னர் ஐரோப்பியர்களே இந்த பரிசினைத் தொடர்ந்து தட்டிச்சென்றனர். இதனால் நோபல் பரிசுக் குழு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.  இந்நிலையிலேயே இவ்வாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினை மீண்டும் தென் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .