2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இங்கிலாந்துக்கெதிராகக் கிடைத்தது வெட்ககரமான தோல்வி: மத்தியூஸ்

Shanmugan Murugavel   / 2016 மே 22 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, ஓர் இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்த நிலையில், இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை, இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பந்தை ஆடாமல் அப்படியே விடுவதில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ், இங்கிலாந்து அணி சிறப்பான இடங்களில் பந்துவீசியதாகவும், இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள், துடுப்பை வெறுமனே நீட்டி, ஆட்டமிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

'அதுவொரு, வெட்ககரமான தோல்வி. அது வெறுமனே மோசமான துடுப்பாட்டமும் (துடுப்பாட்டத்தை) செயற்படுத்துதலும். இந்த வீரர்களுக்கெதிராக நீங்கள், மிகவும் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - குறிப்பாக, இவ்வாறான ஆடுகள நிலைமைகளில்.

அன்டர்சன், தனது உயர்நிலையைத் திரும்பவும் காட்டினார். ஸ்டுவேர்ட் ப்ரோடும் சிறப்பாகச் செயற்பட்டார். ஒருவர் அல்லது இருவர் முன்வந்து, சிறப்பாக ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது - குறிப்பாக முதலாவது இனிங்ஸில். அதைச் செய்வதற்கு முதல் இனிங்ஸில் தவறியிருந்தோம், இரண்டாவது இனிங்ஸிலும் அவ்வாறே. ஆகவே, எங்களது தோல்விக்கான வெளிப்படையான காரணம் அது" என அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்தார்.

ஹெடிங்லீ மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் பந்துவீசத் தீர்மானித்த இலங்கை அணி, 83ஃ5 என்ற நிலையில் இங்கிலாந்தைக் கட்டுப்படுத்தியிருந்த போதிலும், ஜொனி பெயர்ஸ்டோ (140), அலெக்ஸ் ஹேல்ஸ் (86) ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால், 298 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி முதல் இனிங்ஸில் 91 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க (ஜேம்ஸ் அன்டர்சன் 5, ஸ்டுவேர்ட் ப்ரோட் 4 விக்கெட்டுகள்), பொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டது. இரண்டாவது இனிங்ஸில் தடுமாறிய இலங்கை, 119 ஓட்டங்களுக்கு (ஜேம்ஸ் அன்டர்சன் 5, ஸ்டீவன் பின் 3) ஆட்டமிழந்திருந்தது.

முதல் இனிங்ஸில் அஞ்சலோ மத்தியூஸின் 34, இரண்டாவது இனிங்ஸில் குசால் மென்டிஸின் 53 ஓட்டங்கள் தவிர, இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்டிருக்கவில்லை.

முதலாவது இனிங்ஸில் பந்துவீசும் போது, 5 விக்கெட்டுகளை இலகுவாகக் கைப்பற்றிய போதிலும், பின்னர் பிடியை நழுவவிட்டு விட்டதாகத் தெரிவித்த மத்தியூஸ், இங்கிலாந்தின் ஜொனி பெயர்ஸ்டோ, சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியதாகவும் அவருக்கும் அலெக்ஸ் ஹேல்ஸூக்கும் பாராட்டுச் செல்ல வேண்டுமெனவும் தெரிவித்தார்.

குறித்த ஆடுகளத்தில் ஓரளவு சிறப்பான ஓட்ட எண்ணிக்கையை அவர்கள் பெற்ற போதிலும், இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களால் 300 ஓட்டங்களைப் பெறக்கூடிய திறமை காணப்படுவதாகத் தெரிவித்த மத்தியூஸ், முதலாவது இனிங்ஸில் 90 ஓட்டங்களுக்கு அண்மையாகப் பெற்ற பின்னர், இரண்டாவது, மூன்றாவது நாட்கள், கடினமானவையே எனவும் தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் போட்டியை மூன்று நாட்களிலேயே இலங்கை தோற்ற நிலையில், அடுத்த போட்டி மே 27ஆம் திகதி ஆரம்பிக்க, இன்னும் 4 நாட்கள் உள்ளதால், அதற்கிடையில் போதுமான தயார்படுத்தல்களை மேற்கொண்டு, இலங்கையால் ஒரு மீள்வருகையை நிகழ்த்த முடியுமா என்பது தான், தற்போதுள்ள கேள்வியாக உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .