2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

ஐ.சி.சி-யை பெரிய நாடுகள் வெருட்டக்கூடாது

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 26 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்புக் குறித்து, அதன் புதிய தவிசாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவருமான ஷஷாங் மனோகர், கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால், ஐ.சி.சி-இன் நிர்வாகக் கட்டமைப்பில் முழுமையான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில், தலைவர் பதவியென்பது சம்பிரதாயபூர்வமானதாக மாற்றப்பட்டு, பலமிக்க தவிசாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது.

அத்தோடு, இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய மூன்றும், அதிக நிதியியல் நன்மைகளையும் அதிகாரங்களையும் கொண்டதாக மாற்றப்பட்டது.

தற்போது, புதிய தவிசாளராகப் பதவியேற்றுள்ள மனோகர், மூன்று பெரிய நாடுகளும் (இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா) சர்வதேச கிரிக்கெட் சபையை வெருட்டும் தற்போதைய நிலையை ஆதரிக்கவில்லையெனத் தெரிவித்தார். இது தனது தனிப்பட்ட கருத்தெனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய யாப்பின்படி, பெரிய மூன்று நாடுகளும், கிரிக்கெட் சபையின் பிரதான செயற்குழுக்கள் அனைத்திலும் இடம்பெறுவதாகவும், ஆகவே, வர்த்தக, நிறைவேற்றுக் குழு விடயங்கள், இந்நாடுகளாலேயே கட்டுப்படுத்தப்படுவதாகவும், இது தவறானதெனவும் தெரிவித்தார்.

ஒருவர் சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அல்லது துணை அங்கத்துவ நாடுகளிலிருந்து வந்தாலும் கூட, தகுதியானவர்களையே செயற்குழுவில் கொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் வருமானத்தில் 22 சதவீதம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் செல்லும் நிலையில், அதைத் தான் ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், வறுமையான நாடுகளை மேலும் வறுமையாக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.

அத்தோடு, சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளராகத் தான் இருக்கின்ற போதிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதிநிதியாகவும் தான் உள்ளானரெனவும், எனவே, அச்சபையின் நன்மைகளைப் பற்றியே எண்ணுவாரெனவும், ஐ.சி.சி பற்றிச் சிந்திப்பாரென எவ்வாறு எதிர்பார்ப்பதெனவும், தவிசாளர் முறை பற்றிய தனது விமர்சனங்களையும் அவர் வெளிப்படுத்தினார்.

உலக கிரிக்கெட் அரங்கில், இந்தியாவின் ஆதிக்கத்தைத் திணித்த ஸ்ரீனிவாசனின் பதவியிழப்பு, ஷஷாங் மனோகரின் இவ்வாறான கருத்துகள் ஆகியன, பாரிய மாற்றங்களைக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .