2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

சுழற்பந்து வீச்சுக்கு அஞ்சுகிறார் கிரஹாம் ஃபோர்ட்

Gopikrishna Kanagalingam   / 2017 மே 18 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுள் முக்கியமானவராகக் கருதப்படும் முத்தையா முரளிதரன் பிறந்த இலங்கை அணி, தற்போது எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர்களைக் கண்டு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக, இலங்கை அணி, இங்கிலாந்துக்குப் புறப்பட முன்னரே, அணியின் பயிற்றுநர் கிரஹம் ஃபோர்ட், இந்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அணியின் துடுப்பாட்டமே, இலங்கைக்குப் பலமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஃபோர்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், சிறந்த அடித்தாடும் வீரர்களை, இலங்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனவே, சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான ஆடுகளங்கள், துடுப்பாட்டத்துக்குச் சாதகமான ஆடுகளங்களாக அமையுமென எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “அதிகமாகச் சுழல வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோமென நான் நினைக்கவில்லை. ஏனெனில், தென்னாபிரிக்க அணியில் இம்ரான் தாஹிர், மிகச்சிறந்த ஆயுதம். அதேபோல், இரவிச்சந்திரன் அஷ்வினும் ஏனைய சுழற்பந்து வீச்சாளர்களும், முக்கியமானவர்களாக இருப்பர். நாங்கள், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த ஆடுகளங்களை எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, லசித் மலிங்கவும் நுவான் குலசேகரவும், இறுதி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசுவதை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை அணியின் சம்பியன்ஸ் கிண்ண வாய்ப்புகளைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை அணி, வாய்ப்புகள் குறைவான அணியாக இருப்பதை ஏற்றுக் கொண்டதோடு, கடினமான இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு, எதிர்பார்ப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள், ஜூன் 1ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன. இலங்கை அணி தனது முதலாவது போட்டியில், தென்னாபிரிக்க அணிக்கெதிராக, ஜூன் 3ஆம் திகதி விளையாடவுள்ளது. இலங்கையின் குழுவில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X