2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருடன் ஆஸி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி, சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருடன் களமிறங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வணியின் பயிற்றுநர் டெரன் லீமனும், அவ்வாறான சமிக்ஞைகளையே வெளிப்படுத்தியுள்ளார்.

முதலாவது போட்டி, பல்லேகெலை மைதானத்தில் இடம்பெற்றபோது, நேதன் லையன், ஸ்டீவன் ஓப் கீ ஆகிய இருவர் களமிறங்கியிருந்தனர். அப்போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, காயம் காரணமாக ஓப் கீ வெளியேற வேண்டியேற்பட்டது. அப்போட்டியில் இலங்கை அணிக்கு, 106 ஓட்டங்களால் வெற்றி கிடைத்திருந்தது.

இந்நிலையில், நாளை ஆரம்பிக்கவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டி, காலியில் இடம்பெறவுள்ளது. காலி மைதானம், வழக்கமாக சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமான மைதானமாகும். எனவே தான், சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருடன் களமிறங்குவது குறித்து, அவுஸ்திரேலிய அணி ஓரளவு உறுதியாகக் காணப்படுகிறது.
ஓப் கீ-க்குப் பதிலாக டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்டுள்ள ஜோன் ஹொலன்ட், தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோன் ஹொலன்ட் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டெரன் லீமன், "அவர் உயரமானவர், சிறப்பான வகையில் பந்தை வீசுபவர், சரியான வேகத்தில் வீசுபவர். இங்கு, வெற்றிகரமாக அமைவார் என நான் உறுதியான நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், "அது தான் சிறப்பான முறை என நான் நினைக்கிறேன். ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும், ஆனால், சுழற்பந்து வீச்சாளர்கள் இருவரை விளையாடுவோம் என நான் ஓரளவு உறுதியாக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .