2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

‘நேமர் எங்களுக்கு வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 24 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேமர் எங்களுக்கு வேண்டும். களத்தில் அவரின் பெறுமதியும் வீரர்கள் அறைக்கு அவர் என்ன கொண்டு வருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும்” என ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் புதிய முகாமையாளரான எர்னேஸ்டோ வல்வேர்டே தெரிவித்துள்ளார்.  

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸுக்கெதிரான சிநேகபூர்வ போட்டியில், நேமர் இரண்டு கோல்களைப் பெற்று, 2-1 என்ற கோல் கணக்கில், பார்சிலோனாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் பிற்பாடே, பார்சிலோனாவிலேயே நேமரைத் தக்க வைக்கும் மேற்படி கருத்தை எர்னேஸ்டோ தெரிவித்துள்ளார்.  

பார்சிலோனா கழகத்தின் தலைவர் ஜோசெப் மரியா பர்டோமெயு, நேமர் விற்பனைக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளபோதும், நேமரை வாங்குவதற்குரிய 222 மில்லியன் யூரோக்களை வழங்கத் தயாராக இருப்பதாக, பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜேர்மைன் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

இந்நிலையில், மேற்கூறப்பட்ட போட்டியின் பின்னர், வல்வெர்டே மட்டுமே கருத்துத் தெரிவித்த நிலையில், நேமர் ஊடகவியலாளர்களிடம் பேசியிருக்கவில்லை.  

இந்த சந்தர்ப்பத்தில், நேமர் குறித்து வினவியபோது கருத்துத் தெரிவித்துள்ள பரிஸ் ஸா ஜேர்மனின் முகாமையாளர் உனை எம்ரே, அணிக்கு உதவுகின்ற வீரர்களை, பரிஸ் ஸா ஜேர்மைன் எப்போதும் நோக்குகிறது என்று கூறியுள்ளார்.  

25 வயதான நேமர், பிரேஸில் கழகமான சான்டோஸிலிருந்து, 2013ஆம் ஆண்டு, பார்சிலோனாவில் இணைந்திருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு வரை நீடிக்கக் கூடிய, புதிய ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றில், கடந்தாண்டு ஒக்டோபரில் கைச்சாத்திட்டிருந்தார்.  

எவ்வாறெனினும், பார்சிலோனாவில், லியனல் மெஸ்ஸிக்கே முன்னுரிமை வழங்கப்படுவது குறித்தும், அதற்கடுத்த இடமே தனக்கு வழங்கப்படுவது குறித்து நேமர் கவலையடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .