2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மீண்டும் சிக்கியது ரஷ்யா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 19 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் சோச்சி நகரில், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது, ரஷ்ய வீர, வீராங்கனைகள், ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபட்டதாகவும் ரஷ்யாவின் அதிகாரிகள், ஊக்கமருந்துச் சோதனை முடிவுகளை மாற்றுவதில் ஈடுபட்டார்கள் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், இன்னும் சில வாரங்களில் பிரேஸிலின் றியோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து, ரஷ்ய அணி, முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன.

2008ஆம், 2012ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், அரச ஆதரவுடனான ஊக்கமருந்துப் பாவனை, ரஷ்யாவில் இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் தடகளச் சம்மேளனம் மீது தடை விதிக்கப்பட்டது. அதனால், ரஷ்யாவின் தடகள வீர, வீராங்கனைகள், இம்முறை ஒலிம்பிக்கில் பங்குபெற முடியாது போயுள்ளது.

இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக்கிலும் அவ்வாறு இடம்பெற்றதா என்பது தொடர்பாக ஆராய்வதற்காக, ஊக்கமருந்துக்கெதிரான உலக முகவராண்மையால் நியமிக்கப்பட்ட றிச்சர்ட் மக்லரன் தலைமையிலான சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இதிலேயே, ரஷ்யாவின் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவோடு, ஊக்கமருந்துப் பாவனை இடம்பெற்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முக்கிய சாராம்சம்:

1. மொஸ்கோவின் காணப்பட்ட ஊக்கமருந்துப் பரிசோதனைக்கான ஆய்வுகூடத்தில், ஊக்கமருந்துப் பாவனை உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள் கிடைக்கப்பெற்றால், அதுகுறித்துப் பொய்யான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. விளையாட்டுத்துறை அமைச்சு, ரஷ்யாவின் ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மை, ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புச் சேவை ஆகியன, இதில் இணைந்து செயற்பட்டன.

2. 2011ஆம் ஆண்டிலிருந்து, பரிசோதனை ஒன்றில் ஒருவர் சிக்கினால், அவர் பாதுகாக்கப்படுவாரா அல்லது உண்மையான முடிவே அறிவிக்கப்படுமா என்பதை, விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் யூரி நாகோர்னிக்கே முடிவுசெய்தார். அவர் "காப்பாற்றுங்கள்" என்று ஒருவரைக் குறிப்பிட்டால், அவரது முடிவு குறித்துப் பொய்யான தகவல்கள் பதியப்படும்.

3. பெரும்பாலான வெளிநாட்டு வீரர்களின் உண்மையான முடிவுகளே வழங்கப்பட்ட போதிலும், ஆகக்குறைந்தது ஒருவராவது, ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டார்.

4. வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் காணப்பட்ட சோச்சி ஆய்வுகூடத்தில், சிறுநீர் மாதிரிகள், இரவு நேரத்தில் மாற்றப்பட்டன.

5. சிறுநீர் மாதிரிகள் அடங்கிய போத்தல்களை இரகசியமாகத் திறந்து, சிறுநீரை மாற்றுவதற்கான முறை ஒன்றை, ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புச் சேவை விருத்தி செய்துள்ளது.

6. ஆய்வுகூடத்தில் எலி செல்லும் அளவிலான துளை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலமாக சிறுநீர் மாதிரிகள் மாற்றப்பட்டன.

7. ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபடாதோரின் சிறுநீர் மாதிரிகள் சேர்த்து வைக்கப்பட்டு, எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .