2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மேலதிக நேரத்தில் கோல்: பிரான்ஸை தோற்கடித்தது போர்த்துக்கல்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் இடம்பெற்றுவந்த யூரோ 2016 கிண்ண போட்டிகளின் இறுதிப் போட்டியில், மேலதிக நேரத்தில் பெறப்பட்ட கோல் காரணமாக, போட்டியை நடாத்தும் நாடான பிரான்ஸை தோற்கடித்த போர்த்துக்கல், காயம் காரணமாக தமது அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை இழந்தபோதும், முதற்தடவையாக யூரோ சம்பியன்களாக முடிசூடிக் கொண்டது.

போட்டியின் ஏழாவது நிமிடத்திலேயே பிரான்ஸின் திமித்திரி பயேட்டுடன் மோதிய ரொனால்டோ, முழங்காலில் காயமடைந்து போட்டியின் 25ஆவது நிமிடத்தில் வெளியேறியிருந்தார். இதனையடுத்து, போட்டியின் ஆரம்பத்திலேயே கிண்ணத்தை கைப்பற்றும் அதிக வாய்ப்புள்ள அணியாக இருந்த பிரான்ஸ், ரொனால்டோவின் பிரசன்னமற்ற நிலையைத் பயன்படுத்த தவறிவிட்டது.

போர்த்துக்கல்லின் மத்திய தடுப்பாட்டக்காரர்களான பெப்பே, ஜோஸே ஃபோஞ்சி ஆகியோர் சிறப்பாகச் செயற்பட்டு, பிரான்ஸ் வீரர்களின் கோல் பெறுவதற்கான பந்துப் பரிமாற்றங்களை தடுத்த நிலையில், இறுதிப் போட்டியின் நாயகனான போர்த்துக்கல்லின் கோல்காப்பாளர் ரூயி பற்றிசியோ, அந்தோனி கிறீஸ்மன்னின் இரண்டு கோல் பெறும் வாய்ப்புகளையும்  ஒலிவர் ஜிரோட்டின் கோல்பெறும் வாய்ப்பொன்று உள்ளடங்கலாக அபாரமாகச் செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், போட்டியின் வழமையான நேரத்தின் இறுதியில் பிரான்ஸின் மாற்று வீரராகக் களமிறங்கிய அன்றே-பியர் ஜிங்ஜக் திரும்பி அடித்த பந்து கோல்கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்ததுடன், மேலதிக நேரத்தில், 108ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல்லின் றபையேல் கிகிரி அடித்த ‘பிறீ கிக்’ ஒன்றும் கோல்கம்பத்தில் பட்டுச் சென்றிருந்தது.

எனினும் அடுத்தடுத்த செக்கன்களில், போர்த்துக்கல் கிண்ணம் வெல்லக் காரணமான மாற்றுவீரராகக் களமிறங்கிய ஈடர் 25 யார் தூரத்திலிருந்து அடித்த பந்து, பிரான்ஸின் அணித்தலைவரும் கோல்காப்பாளருமான ஹிகோ யோரிஸை தாண்டிச் சென்று, போர்த்துக்கல்லுக்கு யூரோ கிண்ணத்தை வழங்கிய கோலாக அமைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .