2021 மே 06, வியாழக்கிழமை

லெய்செஸ்டரை வென்று அரையிறுதியில் செல்சி

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு செல்சி தகுதிபெற்றுள்ளது.

விலகல் முறையிலான இத்தொடரில் லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு செல்சி தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் முதற்பாதி முடிவடைய மூன்று நிமிடங்களிருக்கையில், லெய்செஸ்டர் சிற்றியின் கெலெச்சி லெஹாஞ்சோவின் றியாட் மஹ்ரேஸுக்கான மோசமான பந்துப் பரிமாற்றைத்தை இடைமறித்த செல்சியின் வில்லியன் அப்பந்தை அல்வரோ மொராட்டாவிடம் வழங்க அவர் அப்பந்தை கோலாக்க முதற்பாதி முடிவில் செல்சி முன்னிலை பெற்றது.

எவ்வாறெனினும், தலையால் முட்டி கோல் பெறும் வாய்ப்பொன்றைத் தவறவிட்ட லெய்செஸ்டர் சிற்றியின் ஜேமி வார்டி போட்டியின் 76ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்று கோலெண்ணிக்கையைச் சம்ப்படுத்தினார்.

போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றது.

இந்நிலையில், மேலதிக நேரத்தின் முதற்பாதி முடிவில், சக வீரர் என்கலோ கன்டேயிடமிருந்து வந்த உதையை தலையால் முட்டிக் கோலாக்கிய, மாற்று வீரராகக் களமிறங்கிய பெட்ரோ வழங்கிய முன்னிலையோடு மேலதிக நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு செல்சி தகுதிபெற்றுள்ளது.

அரையிறுதிப் போட்டியில், நேற்று இடம்பெற்ற மற்றைய காலிறுதிப் போட்டியில் விகன் அத்லெட்டிக்கை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற செளதாம்டனை செல்சி சந்திக்கின்றது. மற்றைய அரையிறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் எதிர்கொள்ளவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .