2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

இந்திய – நியூஸிலாந்து 2 ஆவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு

Super User   / 2010 நவம்பர் 16 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 350 ஓட்டங்களையும் இந்திய முதல் இன்னிங்ஸில் 472 ஓட்டங்களையும் பெற்றன. இந்திய அணியின் சார்பில் ஆகக் கூடுதலாக ஹர்பஜன் சிங் 111 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் நான்காவது நாளான நேற்று திங்கட்கிழமை, நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று அவ்வணி 448 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இன்னிங்ஸில் பிரண்டன் மெக்கலம் 225 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற ஆகக்கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

இந்திய பந்துவீச்சாளர்களில் ஸ்ரீசாந்த் 121 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரக்யன் ஓஜா 137 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் சுரேஷ் ரெய்னா 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் 117 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையே கைப்பற்றினார்.

போட்டியின் இறுதிநாளான இன்று பிற்பகல் வெற்றி பெறுவதற்கு 327 ஓட்டங்கள் தேவையான நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. அவ்வணி விக்கெட் இழப்பின்றி 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில் இப்போட்டி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

பிரண்டம் மெக்கலம் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
டெஸ்ட் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும் நியூஸிலாந்து 8 ஆவது இடத்திலும் உள்ளன. எனினும் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் இரு போட்டிகளையும் வெற்றி தோல்வியின்றி நியூஸிலாந்து நிறைவு செய்துள்ளது.

மூன்றாவது போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை நாக்பூரில் ஆரம்பமாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .