2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இலங்கையுடனான முதல் டெஸ்ட்டில் கிறிஸ் கைல் இரட்டைச் சதம்

Super User   / 2010 நவம்பர் 15 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணியுடனான முதலாவது கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கைல், இரட்டைச் சதம் குவித்து தனது அணியை வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார்.

இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் மேற்கிந்திய அணித்தலைவர் டெரன் சமி வெற்றி பெற்றார்.

அதையடுத்து மேற்கிந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து. வழக்கமாக சொந்த மண்ணில் பிரகாசிக்கும் இலங்கை அணி இன்று கிறிஸ் கைலின் துடுப்பாட்டத்தின் முன்னால் துவண்டு போனது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய கிறிஸ் கைலும், அட்ரியன் பாரத்தும் முதல் விக்கெட்டுக்காக 110 ஓட்டங்களைக் குவித்தனர்.

பாரத் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  எனினும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய கிறிஸ் கைல் தனது மூன்றாவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். 247 பந்துவீச்சுகளை எதிர்கொண்ட அவர், 8 சிக்ஸர்கள் 26 பௌண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 219 ஓட்டங்களைக்குவித்தார்.

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸர்களை குவித்த மேற்கிந்திய வீரர் எனும் பெருமையை கிறிஸ் கைல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  சுராஜ் ரந்திவ்வின் ஓவரொன்றில் கைல் 18 ஓட்டங்களைப் பெற்றார்.

கிறிஸ் கைல் இதுவரை 3 இரட்டைச் சதங்கள் உட்பட 13  டெஸ்ட் சதங்களைக் குவித்துள்ளார். இவற்றில் இந்திய உபகண்டத்தில்  அவர் பெற்ற முதல் சதம் இதுவாகும்.

இதேவேளை இப்போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமான டெரன் பிராவோ 58 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

இன்றைய ஆட்டமுடிவின்போது மேற்கிந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 362 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கிறிஸ் கைல் 219 ஓட்டங்களுடனும் சிவ்நாரின் சந்தர்போல் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .