2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

ஆஸி- இலங்கை போட்டிகளுக்காக அறைகளை வழங்க ஹோட்டல்கள் மறுப்பு

Super User   / 2011 ஜூன் 15 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கிடையில் கொழும்பில் நடைபெறவுள்ள  கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்காக, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு (இலங்கை கிரிக்கெட் சபை) அறைகளை வாடகைக்கு வழங்க நட்சத்திர ஹோட்டல்கள் சில, மறுப்பு தெரிவித்துள்ளன. ஹோட்டல்களுக்கு செலுத்தவேண்டிய கொடுப்பனவுகளில் தாமதம் ஏற்பட்டமையே இதற்குக் காரணம்.

அவுஸ்திரேலிய அணி, ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 20 ஆம் திகதிவரை ஒரு 20 ஓவர் போட்டி 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அண்மைக்காலமாக கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடந்த மாதம் அதன் சுமார் 270 ஊழியர்களுக்கு சம்பளப்பணத்தை உரிய திகதியில் செலுத்த முடியாமல் அது தடுமாறியது.

இந்நிலையில் அரசாங்கத்திடமிருந்து மானிய உதவியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோரியிருந்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா மானியம் வழங்கும் திட்டமொன்று  புதன்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் அமைச்சரவையில் முன்வைக்ககப்பட்டபோது அமைச்சர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்களின் பணத்தை ஊழல் மிக்க, வினைத்திறனற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு வழங்குவது குறித்து  கலந்துரையாடுவதற்குக் கூட அமைச்சர்கள் மறுத்தனர் என சிரேஷ்ட அரசாங்க வட்டாரமொன்று தமிழ் மிரரின் சகோதர ஊடகமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தது.

இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்துத் தெரிவிக்கையில்,, உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக பள்ளேகல, ஆர். பிரேமதாஸ அரங்குகளை புனரமைப்பதற்கும் ஹம்பாந்தோட்டையில் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரக்கெட் அரங்கை நிர்மாணிப்பதற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு அதிக செலவாகியதாகவும் இச்சூழ்நிலையிலேயே தான் மேற்படி அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X