2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

இங்கிலாந்திற்கெதிராக இந்திய அணிக்கு இலகுவான வெற்றி

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளது. போட்டியின் 5ஆவது நாளான இன்று இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் இப்போட்டியை இலகுவாக வென்றது.

ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நேற்றைய நாள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 406 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன்படி இன்றைய தினம் தனது 5 விக்கெட்டுக்களையும் அவ்வணி 66 ஓட்டங்களுக்கு இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக அலஸ்ரெயர் குக் 176 ஓட்டங்களையும், மற் பிரயர் 91 ஓட்டங்களையும், நிக் கொம்ப்ரன் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக பிரக்ஜான் ஓஜா 4 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஷகீர் கான் 2 விக்கெட்டுக்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்படி 77 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதில் முதலாவது விக்கெட்டுக்காக 57 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக செற்றேஸ்வர் புஜாரா ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும், விரேந்தர் செவாக் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டை கிரேம் ஸ்வான் வீழ்த்தியிருந்தார்.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இந்திய அணி புஜாராவின் இரட்டைச்சதத்தின் உதவியுடன் 521 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து தனது ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.

இங்கிலாந்து அணி பதிலளித்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

போட்டியின் நாயகனாக இந்திய அணி சார்பாக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய செற்றேஸ்வர் புஜாரா தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .