2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்காவிற்கெதிராக இந்தியாவிற்குப் படுதோல்வி

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளது.
 
ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது.
 
முதலாவது விக்கெட்டுக்காக 29.3 ஓவர்களில் 152 ஓட்டங்களைக் குவித்த அவ்வணி சார்பாக 4ஆவது விக்கெட்டுக்காக 105 ஓட்டங்கள் வெறுமனே 46 பந்துகளில் ஏபி.டி.வில்லியர்ஸ், ஜே.பி.டுமினி இருவராலும் பகிரப்பட்டன.
 
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக குயின்டன் டீ கொக் 121 பந்துகளில் 135 ஓட்டங்களையும், ஏபி.டி.வில்லியர்ஸ் 47 பந்துகளில் 77 ஓட்டங்களையும், ஹசிம் அம்லா 88 பந்துகளில் 65 ஓட்டங்களையும், ஜே.பி.டுமினி 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக மொஹமட் ஷமி 10 ஓவர்களில் 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதோடு, விராத் கோலி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
 
359 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 41 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 141 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
 
முதலாவது விக்கெட்டை 14 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, அதன் பின்னர் 2ஆவது விக்கெட்டுக்கா 46 ஓட்டங்களைப் பகிர்ந்தது. ஆனால் அதன் பின்னர் விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாக இழந்து அவ்வணி தடுமாறியது.
 
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக மகேந்திரசிங் டோணி 71 பந்துகளில் 65 ஓட்டங்களையும், விராத் கோலி 35 பந்துகளில் 31 ஓட்டங்களையும், இரவீந்திர ஜடேஜா 30 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக டேல் ஸ்ரெய்ன் 8 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், றயன் மக்லரன் 8 ஓவர்களில் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மோர்னி மோர்க்கல், ஜக்ஸ் கலிஸ் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
இப்போட்டியின் நாயகனாக குயின்டன் டீ கொக் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .