2026 ஜனவரி 03, சனிக்கிழமை

'ஐ.நாவுடன் அரசாங்கத்துக்கு அகங்கார மோதல் கிடையாது'

Nirshan Ramanujam   / 2017 ஜூலை 20 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நாவுடன் முரண்படும் நோக்கம் கிடையாது என்றும், ஐ.நாவுடனான செயற்பாடுகள் இராஜதந்திர முறையிலேயே முன்னெடுக்கப்படுமெனவும் நல்லாட்சி அரசாங்கம், நேற்று (19) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

ஐ.நாவுடன், பிரச்சினைகளை ஏற்படுத்தினால், என்ன நடக்குமென, கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் கண்டுகொண்டோம் என்று சுட்டிக்காட்டிய அரசாங்கம், எமது நிலை தொடர்பில் சுயமதிப்பீடு அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளது.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவருமான ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“இலங்கைக்கு விஜயம் கொண்ட மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி பென் எமர்ஸன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்ததையிட்டு, அரசாங்கத்துக்கு பிரச்சினையேதுமில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

“தடுப்பிலுள்ளவர்களை சந்திப்பதற்கு எமர்ஸனுக்கு, அனுமதி கிடைத்த வழிமுறையாதென, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வினவினார்” என்றும் கூறினார்.  

“வெளிநாட்டமைச்சு தான் இவ்வாறான அனுமதியை, வழமையாக வழங்குமென்றும், எமர்ஸனுக்கும் அவ்வாறுதான் அனுமதியளிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தப்பட்டது” என்றும் அமைச்சர் ராஜித்த தெரிவித்தார்.  

அதனைகேட்டுவிட்டு பதிலளித்த ஜனாதிபதி, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இனிமேல், பாதுகாப்பு அமைச்சுக்கும் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  

“கடந்த அரசாங்கமானது, ஐ.நாவுடன் மோதல் போக்கையே கடைப்பித்தது. அதனால்தான், அவ்வரசாங்கம் சர்வதேச சமுகத்தினால், ஓரங்கட்டப்பட்டது. அதே கொள்கையை இந்த அரசாங்கம் பின்பற்றாது” என்றும் ராஜித சேனாரத்ன பதிலளித்தார்.  

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பதிலளிக்கையில்,  

கேள்வி: ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி, இலங்கை தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவருக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் அறிகிறோம். இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? 

பதில்: எமது நிலை தொடர்பில் சுயமதிப்பீடு அவசியம். இது சிறிய நாடு. நாம் மோதத் தயாராகுவது ஐக்கிய நாடுகள் சபையுடன். அதில் நாமும் அங்கம் வகிக்கிறோம். 

நாம் அங்கம் வகிக்கும் அமைப்புக்கு எதிராக எம்மால் செயற்பட முடியாது. அவர்கள் ஏதாவது கோரும் பட்சத்தில் நாம் விளக்கமளிக்க வேண்டும். ஐ.நா. பிரதிநிதிகள் எமக்கு எதிரான அறிக்கைகளைத்தான் கொண்டு வருகிறார்கள் என்பது சரியானது. ஆயினும் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு உண்டு. இது உலக நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். 

நாடு என்ற வகையில் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைப்பதில் மந்த கதி உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை. தமிழ் மக்களின் காணி தொடர்பிலான பிரச்சினைகளுக்கு இறுதி முடிவுகள் இல்லை. காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இல்லை. இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்காமல் எமது செயற்றிட்டங்கள் வெற்றியளித்துள்ளதாக எமக்குக் கூற முடியாது. 

கேள்வி: இலங்கை பொலிஸாரின் துன்புறுத்தல்கள் குறித்து எமர்ஸனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன் வழக்கு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. 70 சிறைக்கைதிகள் 5 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இதற்குரிய தீர்வுகள் என்ன? 

பதில்: அந்த 70 பேரும் தமிழ் அரசியல் கைதிகள். இது தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடியிருக்கிறோம். உரியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் ஏனையவர்களை விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படுகிறது என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X