Editorial / 2017 ஜூன் 11 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது பல சேனா அமைப்பின் ஞானசார தேரரைக் கண்டுபிடிப்பதற்கு, தேவைப்படுமாயின் இராணுவப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்த உத்தரவிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அண்மையில் நடைபெற்ற அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போதே, இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.
ஞானசார தேரர் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைக் கண்டுபிடிப்பதற்கு, புலனாய்வு அமைப்புகளால் முடியுமானால், ஞானசாரரை ஏன் கண்டுபிடிக்க முடியாது என அவர்கள் கேள்வியெழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கண்டுபிடித்தது, இராணுவ புலனாய்வு அமைப்பே என்பதை ஞாபகமூட்டியதோடு, தேவைப்படுமாயின், இந்தப் பணியிலும் அவர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணமாக, வெளிநாடுகளிலிருந்து பணமாகவும் பொருளாகவும் கிடைத்த உதவிகள் தொடர்பில், விரிவான அறிக்கையொன்றை வழங்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம், அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் யாப்பா, இந்தியாவிலிருந்து இரண்டு கப்பல்களில் கிடைக்கப்பெற்ற உதவிகள் தவிர, ஏனையவற்றின் விவரங்களைச் சமர்ப்பிக்க முடியுமெனத் தெரிவித்ததோடு, இந்தியக் கப்பல்கள் தொடர்பான விவரம், கடற்படையிடமிருந்து பெறப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இதன்போது, தேவையான விவரங்களை, கடற்படையிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டார்.
அத்தோடு, வெள்ள, மண்சரிவு இழப்பீடுகளின் போது, அரச ஊழியர்களையும் சேர்த்துக் கொள்வதற்கு, இங்கு முடிவெடுக்கப்பட்டது. முன்னைய இழப்பீட்டுத் திட்டத்தின் போது, அரச ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது என முடிவெடுக்கப்பட்டது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, சேதமான வீடுகளுக்கு, 2.5 மில்லியன் ரூபாயைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தவிர, வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஓர் அங்கத்தவருக்கு, அரச பணியை வழங்கவும், இதன்போது முடிவெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .