தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு வேண்டும்: வை​கோ

 

தமிழ் ஈழம் அமைய, பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று, மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிஸின் பிரதான அரங்கத்தில், வைகோ உரையாற்றியதாவது,

“இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, 2016 நவம்பர் 27ஆம் திகதியன்று, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்ஸின் உதவி நாடி,  ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

“2015ஆம் செப்டெம்பர் மாதம், இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்ட மனித உரிமைகள் கவுன்ஸிலின் 30-1 தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு, மிகத் தந்திரமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அன்டோனியோ குடரெஸ், மனித உரிமைகளின் பாதுகாவலர் ஆவார். இந்தியாவில், 70.5 மில்லியன் தமிழர்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில், 2013 மார்ச் 27ஆம் திகதியன்று ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“இலங்கைத் தீவில், தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களிடமும், உலகம் முழுமையும் வாழ்கின்ற புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான், அத்தீர்மானம் ஆகும். 1979 ஆம் ஆண்டு மே 10ஆம் திகதி, அமெரிக்க நாட்டிலுள்ள மாநிலத்தின் சட்டமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“மிகப் பழங்காலத்திலிருந்து இலங்கைத் தீவில், தமிழர்களும் சிங்களவர்களும் முற்றிலும் வேறுபட்ட மொழிகளையும், மதம், பண்பாடு, வாழுகின்ற பிரதேசங்களையும் கொண்டு இருந்தனர். பிரித்தானியர்கள் அத்தீவை வெற்றி கண்ட பிறகு, தங்கள் நிர்வாக வசதிக்காக, இரண்டு பகுதிகளையும் ஒன்றாக இணைத்தனர்.

“எனவே, தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு முடிவு கட்டவும், அவர்கள் படும் துன்பங்களில் இருந்து விடுவிக்கவும், அமெரிக்கக் குடியரசுத் தலைவரையும் அமெரிக்க நாடாளுமன்றத்தையும் வலியுறுவத்துவது என, இந்த மசாசூசெட்ஸ் சட்டமன்றம் தீர்மானிக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் பிரதிகளை, அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கும் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளருக்கும் அனுப்புவதெனவும் தீர்மானிக்கின்றது.

“மேலும், மசாசூசெட்ஸ் மாநிலத்தின் ஆளுநர், எட்வர்டு ஜே. கிங், 1979 மே 22ஐ, 'ஈழத்தமிழர் நாள்' என்று அறிவித்தார் என்பதையும் இந்த மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். ஆனால், பிற்காலத்தில், அதே அமெரிக்க அரசாங்கம், முன்பு வகுக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, இந்தியாவுடன் இணைந்து, ஈழத்தமிழர் இனப்படுகொலையை இலங்கை நடத்துவதற்குத் துணைபோற்று என்பதையும் வேதனையுடன் சுட்டிக் காட்டுகின்றேன். மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டுகிறேன்” என்று அவர் கோரியுள்ளார்.

 

 


தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு வேண்டும்: வை​கோ

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.