Editorial / 2017 ஜூலை 03 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில், முக்கியமான தொடராகக் கருதப்படும் விம்பிள்டன் சம்பியன்ஷிப் தொடரின் பிரதான சுற்று, இன்று ஆரம்பிக்கவுள்ளது. உலகின் முன்னணி வீரர்கள் பலரும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர்.
16ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தத் தொடரில், மொத்தமாக 31,600,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ், பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
பிரதான தொடர் ஆரம்பிக்கும் இன்றைய தினமே, முக்கியமான வீரர்கள் பலரும் பங்குபற்றும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், தொடருக்கான தரப்படுத்தல்களில், அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் காணப்படுகின்றனர். இதில், முதலிரு இடங்களிலும் காணப்படும் அன்டி மரேயும் நொவக் ஜோக்கோவிச்சும், அண்மைக்காலத்தில் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்த பின்னணியில், அவர்களது ஃபோர்ம் பற்றிய கேள்வியுடன் களமிறங்குகின்றனர்.
அண்மைக்காலம் வரை பின்தங்கிக் காணப்பட்ட ரபேல் நடால், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், முழுமையான ஆதிக்கத்தை வௌிப்படுத்தியிருந்தார். ஆனால், புற்தரை ஆடுகளத்தில், அவருக்கு இன்னமும் பலவீனம் காணப்படுவதாகவே கருதப்படுகிறது.
விம்பிள்டனின் ராஜா எனக் கருதப்படும் ரொஜர் பெடரர், அண்மைக்காலத்தில் ஓரளவு சிறப்பான ஃபோர்மில் காணப்படுகிறார். பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்குபற்றாது, இந்தத் தொடருக்காக, அவர் தயார்படுத்தியிருந்தார். எனவே, இத்தொடரை வெல்வதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டவராக, அவர் கருதப்படுகிறார்.
எனினும், முதல் 4 இடங்களிலும் காணப்படும் எந்தவொரு வீரரும், பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் போட்டிகளைப் பொறுத்தவரை, முன்னணி வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், தனக்கு ஏற்பட்ட கர்ப்பம் காரணமாக, இந்தத் தொடரைத் தவறவிடும் நிலையில், பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள், ஏனைய வீராங்கனைகள் அனைவருக்கும் உண்டு என்றே கருதப்படுகிறது.
முதல்நிலை வீராங்கனையான அங்கெலிக் கேர்பர், கடந்த பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் வெளிப்படுத்திய மோசமான ஃபோர்மைத் தொடர்ந்து, தனது முதலிடத்தைத் தக்க வைக்க, போராட்டத்தை எதிர்கொள்கிறார்.
அதேபோல், சிமோனா ஹலெப், கரோலினா பிளிஸ்கோவா, பெட்ரா குவிற்றோவா ஆகியோரும், அதிக வாய்ப்புகளைக் கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இன்று இடம்பெறும் போட்டிகளில், ஆண்கள் பிரிவில், 12ஆம் நிலையிலுள்ள ஜோ வில்பிரட் சொங்கா, 9ஆம் நிலையிலுள்ள கீ நிஷிகோரி, 7ஆம் நிலையிலுள்ள மரின் சிலிச், 5ஆம் நிலையிலுள்ள ஸ்டான் வவ்றிங்கா, 4ஆம் நிலையிலுள்ள ரபேல் நடால், முதலாம் நிலையிலுள்ள அன்டி மரே ஆகியோர் விளையாடவுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், 11ஆம் நிலையிலுள்ள பெட்ரா குவிற்றோவா, 10ஆம் நிலையிலுள்ள வீனஸ் வில்லியம்ஸ், 8ஆம் நிலையிலுள்ள டொமினில்கா சிபுல்கோவா, 7ஆவது நிலையிலுள்ள ஸ்வெட்லானா குஸ்னெற்ஸோவா, 6ஆம் நிலையிலுள்ள ஜொஹன்னா கொன்டா, 4ஆம் நிலையிலுள்ள எலினா ஸ்விட்டோலினா, முதலாம் நிலையிலுள்ள அங்கெலிக் கேர்பர் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025