2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

சாதனையாக 21ஆவது பதக்கம் வென்றார் பைல்ஸ்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப்பில் பெண்ணொருவரால் வெல்லப்பட்ட பதக்கங்களின் சாதனையை தனது 21ஆவது பதக்க்கத்துடன் ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் முறியடித்துள்ளார்.

ஜேர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடைபெற்றுவரும் உலக ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப்பில் 172.33 மொத்தப் புள்ளிகளுடன் தமது தொடர்ச்சியான ஐந்தாவது அணித் தங்கப் பதக்கத்தை ஐக்கிய அமெரிக்கா வென்ற நிலையிலேயே உலக ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப்பில் தனது 21ஆவது பதக்கத்தை 22 வயதான சிமோன் பைல்ஸ் பெற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் ரஷ்யா இரண்டாமிடத்தையும், இத்தாலி மூன்றாமிடத்தையும், சீனா நான்காமிடத்தையும் வென்றிருந்தன.

இப்போட்டியில் தனிநபராக 59.733 புள்ளிகளைப் பெற்று 15ஆவது தங்கப் பதக்கத்தைப் பெற்ற சிமோன் பைல்ஸ், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்கலப் பதக்கமாகவே 21 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

அந்தவகையிலேயே, ஒன்பது தங்கப் பதக்கங்கள், எட்டு வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கலப் பதக்கங்கள் ஆக 20 பதக்கங்களைப் பெற்றிருந்த ரஷ்யாவின் ஸ்வெட்லனா கொர்கினாவின் சாதனையையே சிமோன் பைல்ஸ் முறியடித்திருந்தார்.

இதேவேளை, உலக ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப்பில் அதிக பதக்கங்களைப் பெற்றவர் என்ற சாதனையையும் முறியடிக்கும் வாய்ப்பையும் சிமோன் பைல்ஸ் கொண்டிருக்கின்றார். 23 பதக்கங்களை சோவியத் ஒன்றியம், சுயாதீன தேசங்களின் பொதுநலவாயம், பெலாரஸுக்காக வென்ற விட்டாலி ஸெர்போவின் சாதனையை முறியடிக்க இன்னும் மூன்று பதக்கங்களை சிமோன் பைல்ஸ் பெற வேண்டியிருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .