2026 ஜனவரி 10, சனிக்கிழமை

மின்னல் வீரனின் பின்னடைவுக்குக் காரணம் என்ன?

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக தடகள சம்பியன்ஸின் 100 மீற்றர் ஓட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று அதிர்ச்சியளித்தார் ஜெமெய்க்காவின் உசைன் போல்ட்.

உலகின் மின்னல் வீரர் என்றழைக்கப்படும் உசைன் போல்ட் உலக தடகள சம்பியன்ஸ் தொடருடன் ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.



இந்நிலையில் அவர் பங்கேற்ற 100 மீற்றர் ஓட்டம் நேற்று (05) லண்டனில் நடைபெற்றது.
இதில் முதல் இரண்டு இடங்களையும் ஐக்கிய அமெரிக்க வீரர்கள் பெற்றுக்கொள்ள உசைன் போல்ட் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.



ஜெஸ்டின் கெட்லின் முதலிடத்தையும் கிறிஸ்டியன் கொல்மன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.



உசைன் போல்ட்டின் ஓட்டத்தைக் காண அரங்கம் முழுதும் இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். சர்வதேச ஓட்டப்பந்தயத்தை வெற்றியோடு நிறைவு செய்யவுள்ளதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.



இந்நிலையில், போட்டியின் ஆரம்பத்தை வேகமாக தொடராமையே தனது பின்னடைவுக்குக் காரணம் என உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

உசைன் போல்ட் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"உலகின் மிகச் சிறந்த தடகள வீரர் என்பதை நான் நிரூபித்திருக்கிறேன். இன்றைய பின்னடைவு அதில் மாற்றம் எதனையும் செய்துவிடாது என நினைக்கிறேன்.

நான் தனித்துவமானவன் என்பதை கடந்த வருடங்களில் வெளிக்காட்டியிருக்கிறேன். நான் எப்போதும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட விதமாக செயற்படுகிறேன். என்னைப் போலவே இன்னொருவர் உருவாகுவார் என நினைக்கவில்லை" என்றார்.

இதேவேளை, போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட ஜெஸ்டின் கெட்லின், உசைன் போல்ட்டுக்கு பணிந்து மரியாதை செலுத்தியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தளங்களில் பெரிதும் பேசப்படுகின்றன.

உலக தடகள சம்பியன்ஸ் போட்டிகள் லண்டனில் ஓகஸ்ட் 4 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நடைபெறுகின்றன.

உசைன் போல்ட் பங்கேற்கும் இறுதி 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .