2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

ரொனால்டோவின் ஹட்-ட்ரிக்கோடு இறுதிப் போட்டியில் போர்த்துக்கல்

Editorial   / 2019 ஜூன் 06 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் தகுதிபெற்றுள்ளது.

தம் நாட்டின் போர்ட்டோவிலுள்ள எஸ்டாடியோ டோ ட்ராகோ மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற சுவிற்ஸர்லாந்துடனான அரையிறுதிப் போட்டியில் வென்றே ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் 25ஆவது நிமிடத்தில், சுவிற்ஸர்லாந்தின் பெனால்டி பகுதிக்கு சற்று வெளியே விதிமுறைகளை மீறி தான் கையாளப்பட வழங்கப்பட்ட பிறீ கிக்கை அபாரமாக கோலாக்கி ஆரம்பத்திலேயே தனதணிக்கு போர்த்துக்கல்லின் நட்சத்திர முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ வழங்கினார்.

இந்நிலையில், போர்த்துக்கல்லின் மத்தியகளவீரரான பெர்ணார்டோ சில்வா, சுவிற்ஸர்லாந்தின் பெனால்டி பகுதிக்குள் வீழ்த்தப்பட ஆரம்பத்தில் போர்த்துக்கல்லுக்கு போட்டியின் 57ஆவது நிமிடத்தில் பெனால்டி வழங்கியிருந்த மத்தியஸ்தர், பின்னர் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் மூலம் குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பதாக போர்த்துக்கல்லின் பெனால்டி பகுதிக்குள் வைத்து சுவிற்ஸர்லாந்தின் மத்தியகளவீரரான ஸ்டீவன் ஸுபரை, போர்த்துக்கல்லின் பின்களவீரரான நெல்சன் செமிடோ விதிமுறைகளை மீறிக் கையாண்டதற்காக பெனால்டி வழங்கினார்.

அந்தவகையில், குறித்த பெனால்டியை சுவிற்ஸர்லாந்தின் பின்களவீரரான றிக்கார்டோ றொட்றிகாஸ் கோலாக்க கோலெண்ணிக்கையை சுவிற்ஸர்லாந்து சமப்படுத்தியது.

எவ்வாறெனினும், போட்டி முடிவடைய இரண்டு நிமிடங்களிருக்கையில், பெர்ணார்டோ சில்வா வழங்கிய பந்தைக் கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்த்துக்கல்லுக்கு மீண்டும் முன்னிலையை வழங்கியதுடன், இறுதி நிமிடத்தில் தனது தனி நகர்வு மூலம் ஹட்-ட்ரிக் கோலை பூர்த்தி செய்ய இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .