2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு தகுதி

A.P.Mathan   / 2010 ஜூலை 08 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை உலக கால்பந்தாட்டப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மன் அணி அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியினை எதிர்த்து ஜேர்மன் அணி விளையாடியது.

ஏற்கனவே யூரோ போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்த ஜேர்மன், நேற்றைய அரையிறுதிப் போட்டியில் அதற்குப் பழிதீர்க்கும் எண்ணத்துடன் மூர்க்கமாகவே விளையாடியது. இடைவேளைக்கு முன்பாதி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இரண்டு அணிகளும் சரிசமமாகவே போட்டி போட்டன. எந்த அணி வெற்றிபெறும் என்பதை கணிப்பதில் ரசிகர்களுக்கு பெரும் சிக்கலாகவே இருந்தது. இருந்தபோதிலும் இடைவேளையின் பின்னர் 73ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் 'பியோல்' அபாரமாக கோல் ஒன்றினைப் போட்டு தமது அணியின் வெற்றியினை உறுதிப்படுத்தினார்.

இம்முறை 'தங்கப் பாதணி' விருதினை வெல்வார் என எதிர்பார்க்கப்படும் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லாவிற்கு பலமுறை கோல் அடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் அதனைத் தவறவிட்டார். இருப்பினும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்தாடவுள்ள நிலையில் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜேர்மன் பேர்லினில் உள்ள கடல்வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகத்தில் இருக்கும் 'போல்' என்ற ஒக்டோபஸ், ஜேர்மன் போட்டிகளின் முடிவுகளை எதிர்வுகூறி வந்திருந்தது. ஸ்பெயினுடனான போட்டியில் ஜேர்மன் தோல்வியடையும் எனவும் அது கணித்திருந்தது. இதனை ஏற்க மறுத்திருந்த ஜேர்மன் ரசிகர்களும் இப்போது அந்த ஒக்டோபஸின் எதிர்வுகூறலை வியக்கின்றனர்.

அரையிறுதிப் போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் சவாலாகவே விளையாடினார்கள். 51 வீதமான நேரம் தமது கட்டுப்பாட்டில் பந்தினை வைத்திருந்தார்கள் ஸ்பெயின் வீரர்கள். 49 வீதமான நேரத்தினையே ஜேர்மன் அணியினரால் பகிர்ந்துகொள்ள முடிந்தது. தோல்வியினால் துவண்டுபோயுள்ள ஜேர்மன் வீரர்களுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளார்கள். வரலாற்றில் முதல்தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கும் ஸ்பெயின் வீரர்களுக்கு உலகளாவிய ரீதியில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணமுள்ளன.

ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள நெதர்லாந்து அணியுடன் எதிர்வரும் 11ஆம் திகதி ஸ்பெயின் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--