2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

100 புள்ளிகளுடன் பிறீமியர் லீக்கை முடித்தது சிற்றி

Editorial   / 2018 மே 14 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் 100 புள்ளிகளுடன் நடப்பு பிறீமியர் லீக் பருவகாலத்தை சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முடித்துக் கொண்டது.

செளதாம்டன் அணியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில், கப்ரியல் ஜெஸுஸின் கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி, இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலமொன்றில் அணியொன்று அடைந்த அதிகூடிய புள்ளிகளான 100 புள்ளிகளை அடைந்ததோடு, பருவகாலமொன்றின் அதிகூடிய வெற்றிகளான 32 வெற்றிகளையும் பெற்றுக் கொண்டது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வட்போர்ட்டுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மார்க்கஸ் றஷ்போர்ட்டின் கோலோடு மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றிருந்தது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற லெய்செஸ்டர் சிற்றி அணியுடனான போட்டியில் 5-4 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்று கொண்டது. டொட்டென்ஹாம் சார்பாக, ஹரி கேன், எரிக் லமேலா ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, லெய்செஸ்டர் சிற்றி சார்பாக ஜேமி வார்டி இரண்டு கோல்களையும் றியாட் மஹ்ரேஸ், கெலெச்சி லெகாஞ்சோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்று கொண்டது. லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா, டெஜா லொவ்ரன், டொமினிக் சொலங்கே, அன்றூ றொபேர்ட்ஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், நியூகாசில் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியி 0-3 என்ற கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்தது. நியூகாசில் யுனைட்டெட் சார்பாக அயஸே பெரேஸ் இரண்டு கோல்களையும் டுவைட் கேல் ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, ஹட்டர்ஸ்பீல்ட் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், பியரி எம்ரிக் அபுமெயங்கின் கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஆர்சனல், இப்போட்டியுடன் ஆர்சனலின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் ஆர்சீன் வெங்கருக்கு வெற்றிப் பிரியாவிடையை வழங்கியிருந்தது.

இந்நிலையில், நேற்றுடன் நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலம் முடிவடைந்த நிலையில், இப்பருவகாலத்தில் 32 கோல்களைப் பெற்ற மொஹமட் சாலா, இப்பருவகாலத்தின் சிறந்த வீரராகத் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .