2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இரண்டாவது போட்டியில் இலங்கைக்கெதிராக அவுஸ்திரேலியா ஆதிக்கம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பித்தது. இன்றைய நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மெல்பேர்ணில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டை 13 ஓட்டங்களுக்கே இழந்த இலங்கை அணி 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் 4ஆவது விக்கெட்டுக்காக 42 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், திலான் சமரவீர ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வீரர்களும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய குமார் சங்கக்கார 8ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக 58 ஓட்டங்களையும், பிரசன்ன ஜெயவர்தன 24 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த வீரரும் 20இற்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிற்சல் ஜோன்சன் 4 விக்கெட்டுக்களையும், ஜக்ஸன் பேர்ட், பீற்றர் சிடில், நேதன் லையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணி சார்பாக முதலாவது விக்கெட்டுக்காக 17.3 ஓவர்களில் 95 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வோணர் 46 பந்துகளில் 62 ஓட்டங்களைக் குவித்தார். தவிர, எட் கொவான் 36 ஓட்டங்களையும், மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அன்ஜலோ மத்தியூஸ், தம்மிக்க பிரசாத் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .