2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பாகிஸ்தானிய நடுவர் அசத் ரௌப் ஓய்வுபெற்றார்?

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் அசத் ரௌப் நடுவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானிய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
 
57 வயதான அசத் ரௌப் இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளிலும், 98 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 23 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
 
அண்மையில் அறிவிக்கப்பட்ட சர்வதேசக் கிரிக்கெட் சபையின் எலைற் பனலுக்கான நடுவர்கள் குழாமில் சேர்க்கப்பட்டிருக்காத அசத் ரௌப், இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றுவதற்கு வாய்ப்புக்கள் இல்லாமற் போனது.
 
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் அவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான நடுவர் பணியிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வுபெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
 
நடுவராகப் பணியாற்றுவதன் காரணமாக அதிகளவு பயணம் செய்ய வேண்டியிருந்ததாகவும், அதன் காரணமாக குடும்பத்தையும், வியாபாரத்தையும் கவனிக்க முடியாது போனதாகவும், அதன் காரணமாக நடுவர் பணியிலிருந்து அசத் ரௌப் ஓய்வுபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அண்மைக்காலத்தில் சர்ச்சைகளில் சிக்கியிருந்த அசத் ரௌப், இந்திய மொடல் நடிகையொருவரை திருமணம் செய்யும் வாக்குறுதியை வழங்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்ததோடு, இவ்வருடம் இடம்பெற்ற இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் ஸ்பொட் ஃபிக்சிங்கில் அசத் ரௌப் இற்குச் சம்பந்தம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
 
இந்தியன் பிறீமியர் லீக்கில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக அதற்குப் பின்னர் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான நடுவர் பணியிலிருந்து அசத் ரௌப் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .