2021 மே 18, செவ்வாய்க்கிழமை

உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான அமுலாக்கல் கூட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்கி அமுலாக்குதல் சம்பந்தமான மாகாண செயற்திட்டக் கூட்டம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபயகுணவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்த அமுலாக்கல் செயற்திட்டமிடல் கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலக அதிகாரிகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், சூழல் பாதுகாப்பு அதிகார சபை, சுகாதாரத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், கால்நடை வளர்ப்பு, கல்வித் திணைக்களம், மேலும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராம அபிவிருத்தி வங்கி, வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றினர்.

மாகாண உயிர்வாயு விரிவுபடுத்தல் திட்டம் ஜனதாக்ஸன் மற்றும் பீப்பிள் இன் நீட் ஆகிய பங்காளர் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுவதாக பயிற்சி வளவாளரும் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளருமான அனுலா அன்ரன் தெரிவித்தார்.

இங்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபயகுணவர்தன உரையாற்றுகையில்,

 'இயற்கைச் சக்தி வளங்கள் இன்று குறைவடைந்து வருகின்றன. பூகோள வெப்ப மயமாதல் மற்றொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இயற்கை சக்தி வளங்கள் குறைவடைதலாலும்  பூகோள வெப்ப மயமாதலாலும் நாம் சமகாலத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுவதோடு எதிர்கால சமூகத்தையும் உலகில் உயிர்வாழ முடியாத ஆபத்தான சூழ்நிலைக்கு ஆளாக்குகின்றோம். எனவே சக்தி வளத் தேவைகள் பற்றி நாம் அக்கறையோடு சிந்திக்க வேண்டும்.

இன்று உலகில் இருக்கும் இயற்கை வளங்களை நாசம் செய்து விடாது அவற்றைப் பேணிப் பாதுகாத்து எதிர்கால சமுதாயத்துக்கு ஒப்படைக்க வேண்டும்.

இயற்கையாகவே கிடைக்கக் கூடிய சக்தி மூலங்களை நாம் மனித செயற்பாடுகளால் அழித்து விடாது பேணிப் பாதுகாப்பதோடு இருக்கும் வளங்களை மிகச் சிக்கனமாகப் பாவித்து மீதப்படுத்த வேண்டும்.

தற்போதைய இயந்திர மயமான வாழ்க்கை முறையில் நாம் இயற்கை வளங்களை வீணடிப்பதைப் பற்றி அக்கறையில்லாதவர்களாக இருந்து வருகின்றோம்.

இதுபற்றி சிந்திப்பது அவசியமும் அவசரமுமாகும். இல்லையேல் நிலம், நீர், காற்று, ஒளி, மற்றும் கனிமப் பொருட்கள் மூலம் தற்சமயம் கிடைத்துக் கொண்டிருக்கும் சக்தி மூலங்களை இழந்து விடுவதோடு எதிர்காலத்தில் எம்மையே நாம் அழித்துக் கொள்ள வேண்டிய அபாயகரமான சூழ்நிலை தோன்றும்.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .