2021 மே 08, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் தரம் ஒன்று மாணவர்களின் விகிதாசாரம் குறைவு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் தரம் பத்திலுள்ள தமிழ் மாணவர்களின் விகிதசாரம் 41ஆக இருக்கின்ற அதேவேளை, தரம் ஒன்றில் அனுமதி பெறுகின்ற தமிழ் மாணவர்களின் விகிதாசாரம் 34ஆக குறைந்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை தெரிவித்த அவர், 'தமிழ் மாணவர்களுடைய வரவில் பாதிப்பு நிகழ்வதை அவதானிக்க முடிகின்றது. இதற்கான காரணங்களை நாங்கள் ஆராய்கின்றோம்' என்றார்.  

'யுத்தமும் ஒரு காரணமென்பதை மறுக்கமுடியாது. யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள் இப்பொழுதும் தமிழ் மக்களுக்கிடையில் தாக்கம் செலுத்துகின்றது. யுத்தப் பாதிப்புக்குள்ளான பின்தங்கிய பகுதிகளிலுள்ள தமிழ்ச் சமூகத்தில் நிலவும் வறுமையும் காரணமாகின்றது' எனவும் அவர் தெரிவித்தார்.  

'கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் மாணவர்களின் வீழ்ச்சிப்போக்கு எல்லை மீறியதாக  உள்ளது. இந்நிலையில், தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கிராமப்புறங்களில் கூடுதலான கவனம்; செலுத்தவுள்ளோம்.

கிராமப்புறங்களில் வறுமை தாண்டவமாடுவதுடன், கல்வி பற்றிய நம்பிக்கையீனங்களும் உள்ளன. எனவே, ஏழை மாணவர்களும் இலவசக்கல்வியின் நன்மையை பூரணமாக அனுபவிக்கக்கூடிய வாய்ப்புகளை கிராமப்புறங்களில் மேம்படுத்துவதற்கான திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

மாணவர்களுடைய கல்வி அபிவிருத்தி வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை இந்த வருட இறுதிவரை திரட்டி  மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் மற்றும் அரசியல் ரீதியான பல்வேறு அங்கத்தவர்களுக்கு தெரியப்படுத்தவுள்ளோம்' எனவும் அவர் தெரிவித்தார்.   'இருப்பினும், இங்கு பிரச்சினையொன்று உள்ளது.  நாங்கள் எந்தவகையான தீர்மானங்களை எடுத்தாலும், அரசியல் ரீதியான அங்கிகாரம் கிடைக்காதபோது இந்தத் திட்டங்களை அமுல்படுத்துவதில் கடந்த காலத்தில் நாங்கள் சிக்கல்களை எதிர்நோக்கினோம்" எனத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 476 தமிழ்ப் பாடசாலைகளில் 146,162 தமிழ் மாணவர்களும் 358 முஸ்லிம் பாடசாலைகளில் 161,220 முஸ்லிம் மாணவர்களும் 268 சிங்களப் பாடசாலைகளில் 79,374 மாணவர்களும் கற்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X