2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

'சிறுபான்மையினரின் பொருளாதார உட்கட்டமைப்பு விடயங்களில் பங்களிப்பு குறைவு'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 12 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

சிறுபான்மையின மக்களினுடைய பொருளாதார உட்கட்டமைப்பு விடயங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பு மிகக் குறைவாகக் காணப்படுகின்றது என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட். களுதாவளை மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆய்வுகூடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்கள் நல்லாட்சி எனும் போர்வையில் அரசாங்கத்தால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றனர். இதனை ஏற்க முடியாது.
நாட்டில் காலத்துக்குக்காலம் ஆட்சி மாற்றம் இடம்பெறும்போது, ஆட்சியைப் பொறுப்பேற்கும் அரசாங்கமானது சிறுபான்மையின மக்கள் தொடர்பான தீர்வு விடயங்களில் கரிசனை கொள்ளாது, தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பை முன்னேற்றுவதில் குறிக்கோளாக செயற்படுகின்றமை கவலை அளிக்கின்றது. இந்த நிலைமை மாற வேண்டும்' என்றார்.

'மத்திய அரசாங்கத்தால் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் நிலையில் விகிதாசார அடிப்படையில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த அதிகளவான இளைஞர், யுவதிகள் சிறுபான்மையினர் வாழ்கின்ற பிரதேசங்களில் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசாங்கத் திணைக்களங்களில் நிரந்தர நியமனம் பெறுகின்றனர். அண்மைக்காலமாக இந்த நிலைமை காணப்படுகின்றது.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட தாதியர் பயிற்சி வைத்தியசாலைக்கு சுமார் 50 சிற்றூழியர் நியமனங்கள் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டன. இதற்கு சகோதர மொழி பேசுகின்ற இளைஞர், யுவதிகளும் உள்வாங்கப்பட்டனர். இதனால் நோயாளிகளுக்கும்; உத்தியோகஸ்தர்களுக்கும் இடையில் மொழி ரீதியான பிரச்சினை மாத்திரமின்றி, சிறுபான்மையினர் தங்களின் சொந்தப் பிரதேசங்களில் வேலைவாய்ப்பை பெறமுடியாத நிலைமை காணப்படுகிறது.

தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள் பேச்சளவில் மாத்திரம் அறிக்கைகளை விடுகின்றனர். தமிழ் மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பவர்கள் பெரும்பான்மையின மக்களே. நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் கொள்கைகளை சிறுபான்மையினர் எதிர்க்காத வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .