ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு - கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள ஊழியர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு, கடிதமொன்று இன்று (22) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராசா தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாண கல்வித்துறை சார்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களை அங்கத்தவர்களாகக் கொண்டியங்கும், பாரிய நிதி சார்ந்த அமைப்பாக, வடக்கு - கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள ஊழியர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம், நீண்டகாலமாக இலாபத்தில் இயங்கிவந்த இச்சங்கமானது, 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், நஷ்டத்தில் இயங்கிவருகின்றது என்றும், அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக, கூட்டுறவு அபிவிருத்தி முன்னாள் ஆணையாளர் திவாகர சர்மாவிடம், கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஆணையாளரால் நிதிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, நிதிக் கையாள்கை, நிதி மோசடி, ஆவணங்களை மறைத்தல், அழித்தல் போன்ற செயற்பாடுகள் நிரூபணமானது என, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஆசிரியர்களின் உழைப்பிலான சேமிப்புப் பணத்தை, அவர்களது அனுமதி பெறாமல், மாதிரிக் கையொப்பமிட்டு பணத்தைச் சூறையாடியமை, இந்த விசாரணையில் நிரூபணமாகியது. இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கத் தயாராகும் காலகட்டத்தில், ஆணையளார் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டார். ஆனால், புதிய ஆணையாளர், இது தொடர்பில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், விடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது" என, சங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயமாக, தாங்கள் தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடுகளைக் சமர்ப்பித்தும், அது கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும், எனவே இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும், நலன்புரிக் கூட்டுறவுத் திணைக்களத்தின் கணக்குப் பரிசோதனையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, மாகாண உள்ளகப் பரிசோதகர்களால், மேற்படி சங்கத்தின் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் பரிசோதனைக்குட்படுத்த, ஆளுநர் உத்தரவிட வேண்டுமென்று, இந்தக் கடிதத்தில் மேலும் கோரப்பட்டுள்ளது.
38 minute ago
45 minute ago
54 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
45 minute ago
54 minute ago
55 minute ago