2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மட்டு. குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 14 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை காலை மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இவ்வித்தியாலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும், அதிபர் நியமிக்கப்பட வேண்டும், உரிய நேரத்துக்கு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
இவ்வித்தியாலயத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அதிபருக்கான வெற்றிடம் நிலவுகிறது. இவ்விடயம் தொடர்பில் கல்வித் திணைக்களம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வித்தியாலயத்துக்கு அதிபர் இல்லாமையால், ஆசிரியர் ஒருவர் பதில் கடமையில் ஈடுபடுவதாகவும் இதனால்,  மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரனிடமும், மேற்படி வித்தியாலயத்தில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் தெரியப்படுத்தினர்.

இதன்போது தெரிவித்த மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், 'ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளோம். புதிய ஆசிரியர் நியமனங்களில் இந்த வித்தியாலயத்திலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மேலும், நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு புதிய அதிபர் விரைவில் நியமிக்கப்படுவார். ஆசியர்கள் உரிய நேரத்துக்கு வருகை தராமை தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--