2021 ஜனவரி 16, சனிக்கிழமை

'முதலீட்டு அதிகார சபையை அமைப்பதற்கான அதிகாரம் வழங்கப்படுமாயின், முதலீட்டைக் கொண்டுவர முடியும்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 11 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

முதலீட்டு அதிகார சபையை அமைப்பதற்கான அதிகாரம் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்படுமாயின், இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய மில்லியன் டொலர் முதலீட்டைக் கொண்டுவர முடியும் என அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த வாய்ப்பை தமது மாகாண நிர்வாகத்துக்குத் தர வேண்டும் என்பதுடன்,  இதற்கு ஜனாதிபதி கூடிய கரிசனை காட்ட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சுமார் 201 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டு அரங்குத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (10) மாலை நடைபெற்றது. இவ்விழாவில்; கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடத்தில் இருந்ததுடன், தற்போது மதுபானப் பாவனையில் இம்மாவட்டம் மூன்றாமிடத்தில் உள்ளது. இங்குள்ள இளைய சமுதாயம்; போதைப்பொருள் வர்த்தகர்களால் இலக்கு வைக்கப்படுகின்றனர். இதனால், இம்மாவட்டத்தில்; கல்வி, பொருளாதாரம், சமூக விழுமியம் ஆகியவை பாதிக்கப்படக்கூடிய நிலைமை உள்ளது.

வறுமையை ஒழிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை அதிகரித்து வளங்களைப் பயன்படுத்தி உச்சப்பயனைப் பெறவேண்டும்' என்றார்.

'மேலும், சிறுபான்மையினரின் பாதுகாப்புக் கவசமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திகழ்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும் சிறுபான்மை மக்கள்   நம்பிக்கை வைத்துள்ளனர். அதனாலேயே,  சிறுபான்மைச் சமூகங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தன. அந்த நம்பிக்கையை ஜனாதிபதியும்; கட்டிக்காத்து வருகின்றார்' என்றார்.

'அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பாடுபட்டுக்;கொண்டிருக்கின்றார். அந்த நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் நாங்களும் தெளிவாக  உள்ளோம்.

13ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால், இந்த நாட்டில் காணப்படும் 70 சதவீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.  13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மாகாண சபைக்கு காணி அமைச்சர் இருக்கின்றார்;. அதேபோன்று, காணி உத்தியோகஸ்தர்கள் இருக்கின்றனர். ஆனால், காணி அதிகாரம் இல்லாததால் மாகாணத்தில் உள்ள பல காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன' என்றார்.

'வெறுமனே எழுத்துகளில் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை வழங்கிவிட்டு, நிதி ஒதுக்கீடு இல்லாமல் அதிகாரத்தைப் பாவிக்க முடியாது என்பதை அனுபவங்களில் கண்டுள்ளோம். எனவே, நிதி ஒதுக்கீட்டை மாகாண சபைகளுக்கு வழங்குங்கள் என ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .