2021 ஜனவரி 16, சனிக்கிழமை

வலது குறைந்தோரையும் அபிவிருத்தியில் இணைத்து கொள்ளுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

இலங்கையில் அனைத்து விதமான அபிவிருத்தி பணிகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும் அவற்றில் வலது குறைந்தவர்களுக்கான திட்டங்களையும் இணைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என வலதுகுறைந்த பெண்களுக்கான அமைப்பின் இயக்குனர் கமலாவதி தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை "வலது குறைந்தோருக்கு அபிவிருத்தியின் கதவைத் திறந்திடுவோம்" என்ற தலைப்பில் மட்டக்களப்பு கோப் இன் சிற்றி விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பினை வலதுகுறைந்த பெண்களுக்கான அமைப்பு, வலது குறைந்தோரின் அபிவிருத்திக்கான வலையமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்வில் வலதுகுறைந்த பெண்களுக்கான அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சர்மிளா, வலது குறைந்தோரின் அபிவிருத்திக்கான வலையமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய வலதுகுறைந்த பெண்களுக்கான அமைப்பின் இயக்குனர் கமலாவதி, "அமைச்சுகளுக்கோ, திணைக்களங்களுக்கோ சென்று எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசும்போது அவர்கள் சமூக சேவைகள் திணைக்களத்துக்கு செல்லுமாறு கூறுகின்றனர்.

அனைத்து தரப்பினருக்கும் பொதுவான விடயங்களுக்குள் எங்களையும் உள்வாங்குவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? பொதுவாக விடயங்களுக்கு வேறு யாரும் நிதிகொடுப்பதில்லை. ஆனால் எங்களுக்கானவற்றை பெற்றுக்கொள்வதற்கு தனியாக நாங்கள் நிதிகொடுக்கவேண்டிய நிலையுள்ளது.

வறுமையான எமது நாட்டை விடவும் வசதி குறைந்த நாடான பங்களாதேஷில் தொலைக்காட்சிகள் தனியாக வலது குறைந்தவர்களுக்காகவும் செயற்படுகின்றன. அவ்வாறிருக்க இலங்கையில் அவ்வாறு செயற்படுதற்கு என்ன பிரச்சினையிருக்கின்றது?

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 4,000 பெண்கள் விதவைகளாக உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 40 வீதமான பெண்கள் யுத்தத்தினால் ஊனமுற்ற நிலையில் உள்ளனர். பொலநறுவை,அனுராதபுரம் மற்றும் கிழக்கு மாகாணம் என்பற்றில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து செயற்றிட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம்" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .