2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வீட்டுத்திட்டங்களின்போது இயற்கை மூலப்பொருள் பாவனைக்கு தடை:மட்டு. அரச அதிபர்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் வீட்டுத்திட்டங்களை மேற்கொள்ளும்போது இயற்கை மூலப்பொருட்கள் பாவிப்பதை தடுத்து செயற்கை மூலப்பொருட்களை பாவிப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

உலககுடியிருப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட "அழகான ஒரு நகரம் அழகான ஒரு வாழ்க்கை" என்ற தொனிப்பொருளிலான உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்  நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் விசேடமாக சுனாமியின் பின்னர் பல்லாயிரக்கணக்கானோர் அதில் பாதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதகதியில் வீடுகள் அமைக்கப்பட்டாலும் கூட இன்னுமொரு பக்கத்திலே எங்களுடைய சுற்றாடல் எமது வளங்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது எல்லோராலும் உணரப்படாத விடயமாகவுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் எமது இயற்கைகள் மிகமோசமாக அழிக்கப்பட்டது. ஆனால் நாம் வீடுகளின் எண்ணிக்கையினை தான் பார்க்கின்றோம். வீடுகள் கட்டப்பட்டதா, வீடுகள் முடிவுற்றதா, இடம்பெயர்ந்தவர்கள் அந்த வீடுகளுக்கு சென்றுவிட்டார்களா என்ற ஒரே பக்கத்தில் மட்டுமே எமது அவதானிப்புகள் இருந்தது.

இதன்போது வீடுகள் எவ்வாறு கட்டப்படுகின்றது, அதன்போது அழிபடும் இயற்கையின் அளவுகள் என்ன? இதனை எவ்வாறு தடுப்பது போன்றவை தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டது மிக அரிதாகவே இருந்தது.

எனவே, அவ்வாறான ஒரு நடவடிக்கை அபிவிருத்தியாக அமையாது. எந்தவொரு அபிவிருத்தியாக இருந்தாலும் கூட அது இன்னொரு நடவடிக்கையை விசேடமாக சுற்றுச்சூழலை அது அழிக்குமேயானால் அல்லது சேதப்படுத்துமேயானால் அதனால் அபிவிருத்தியை அடையமுடியாது.

அதனால் எங்களுடைய எந்தவொரு திட்டமாகவிருந்தாலும் விசேடமாக வீட்டுத் திட்டத்தை பொறுத்தவரையில் நாங்கள் மிகவும் சிந்தனையுள்ளவர்களாக இந்த சுற்றாடல் அழிவுகளில் இருந்து, இந்த சுற்றாடலை பாதுகாக்கக்கூடிய வகையிலே எங்களது நடவடிக்கைகளை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இதற்காகத்தான் நாங்கள் தற்போது புதிய வீட்டுத் திட்டங்களை மேற்கொள்கின்றபோது இயற்கை வளங்களை அதற்காக பெறுவதை குறைத்து செயற்கை வளங்களை பயன்படுத்தும் முறையினை மேற்கொள்ளவுள்ளோம்.

ஏனென்றால் இயற்கை வளங்களைப் பொறுத்தவரையிலே எமது பகுதியின் இயற்கை வளம் மிகவும் மோசமான வகையிலே பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் இந்த இயற்கைப் பொருட்களினால் பெறப்படுகின்ற மூலப்பொருட்களின் பாவனையை குறைத்து செயற்கை பொருட்களினால் பெறப்படுகின்ற பொருட்களை பயன்படுத்துகின்ற முறையினை இனிவரும் காலங்களில் பயன்படுத்தவுள்ளோம்.

இதனை அமுல்படுத்துவதற்கு பல்வேறு நிறுவனங்களுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இந்த நடவடிக்கை சிறப்பான வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் எ.நாகேந்திரன் கருத்தாடல்களை மேற்கொண்டார்.
இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--