2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மட்டக்களப்பில் நிறை குறைவான பாண் விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாரா லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் எடை குறைந்த பாண் விற்பனையில் ஈடுபட்ட  வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை, நிறுவை கருவிகளுக்கு அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த முத்திரை பதியாமலும் உள்ள வர்த்தகர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய சட்ட விரோத வியாபாரிகளை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி வீ.விக்னேஸ்வரனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய குறித்த திணைக்கள அதிகாரிகள் குழு தற்போது மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில் குறிக்கப்பட்ட விலைக்கு குறைவான எடைகொண்ட பாண் விற்பனை செய்வோரையும் அளவை நிறுவை கருவிகள் முத்திரையிடப்படாமலும் அளவை கருவிகளுக்கு பதிலாக போலி அளவை கருவிகள் நிறுவை உபகரணங்களை பயன்படுத்துவோரை கண்டு பிடிப்பதற்கும் திடீர் வேட்டைகளை நடத்தி வருவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய மட்டக்களப்பு மாநகர எல்லைப் பகுதிக்குள் நடத்திய திடீர் வேட்டையில் சட்டவிரோதமாக செயல்பட்ட 9 வர்த்தகர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவற்றுல் ஒரு இராத்தல் பாண் 450 கிராமுக்கு பதிலாக 365, 370, 405 கிராம் எடைகளில் பாண் விற்பனை செய்த ஐவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, அளவை கருவி உபகரணங்களுக்குப் பதிலாக போலியானவவற்றை பயன்படுத்தியதாக இரு வர்த்தகர்களும், முத்திரை பொறிக்கப்படாத அளவைக் கருவிகளைப் பயன்படுத்திய மற்றுமிரு வர்த்தகர்களும் கண்டுபிடிக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வர்த்தகர்களுக்கு தலா 7,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச ஊடகப்பிரிவுத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--