2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

'சிறுவர் சஞ்சிகைகள் கொலை கலாசாரத்தை தூண்டக்கூடாது'

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோகித்)

சிறுவர்களுக்காக வெளிவரும் சிறுவர் இலக்கிய கதைகள் கொலை கலாசாரத்தை தூண்டுபவையாக இல்லாமல், உளவியல் தாக்கத்தை  ஏற்படுத்தாதவையாக வெளிவரவேண்டுமென எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய தலைவர் ஓ.கே.குணநாதன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நேற்று  திங்கட்கிழமை நடைபெற்ற 'கதிரவன்' ஆறாவது சிறுவர் கலை இலக்கிய சஞ்சிகை வெளியிட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


ஒரு நல்ல சிறுகதையில் கொலை கலாசாரம் வராமல் பார்க்கவேண்டிய பொறுப்பு ஒரு எழுத்தாளனையே சாருகின்றது. நாங்களே கொலை கலாசாரத்தை வளர்த்துக்கொண்டு அரசாங்கத்தையோ, விடுதலைப் புலிகளையோ குற்றஞ்சாட்டுவது  ஏற்றுக்கொள்ள முடியாது.

 

மட்டக்களப்பிலிருந்து இவ்வாறாக ஒரு சஞ்சிகை வெளிவருது தொடர்பில் நாங்கள் பெருமையடைகிறோம்;. அந்த வகையில், இவ்வாறான செயற்பாடுகளை ஊக்குவிப்பதும் நமது கடமையாகும். இதுபோன்று எமது மாவட்டத்தின் பல்வேறு வழிகளிலும் அழிந்துகொண்டிருக்கும் கலை கலாசாரங்களையும் வெளிக்கொணர்வது தொடர்பான ஆக்கத்திறனான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கதிரவன் பிரதம ஆசிரியர் த.இன்பராசா தலைமையில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இரா.நாகலிங்கம், கிழக்கு மாகாணசபையின் பாலர் பாடசாலை கல்விப்பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாற்றுப்;பணிப்பாளர் த.கோபாலகிருஷ்ணன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்களெனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

காலாண்டுக்கு ஒரு முறை புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் வெளியீடாக வெளிவரும் இச்சஞ்சிகை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு கலை, கலாசார விழுமியங்களை பேணிப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுகின்றது. இந்நிகழ்வில், புதுக்குடியிருப்பில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஆசிரியரும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--