2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

Editorial   / 2025 நவம்பர் 03 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கிடையில், கடற்றொழில் அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கடற்றொழில் மற்றும் மீன்வளத் துறைகளை நவீனமயப்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீட்டு விரிவாக்கம் மற்றும் அறிவு பரிமாற்றம் போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்த சவூதி அரேபியா முனைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் “Vision 2030” தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மீன்வளர்ப்பு, மீன்வள மேலாண்மை, கடல் ஆராய்ச்சி மற்றும் நீரியல் வள மேம்பாட்டுத் துறைகளில் பெற்றுள்ள முன்னேற்றத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராட்டியதுடன், இலங்கையும் தனது வளமான கடல் பல்லுயிர் வளங்களையும், மூலோபாயமான இந்தியப் பெருங்கடல் இருப்பிடத்தையும் பயன்படுத்தி கடல்சார் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களில், மீன்வளர்ப்பு மேம்பாடு, நவீன தொழில்நுட்ப பரிமாற்றம், இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு, மீன்வள உயிரியல் பாதுகாப்பு, மேலும் தீவன உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் துறைகளில் சவூதி முதலீட்டாளர்கள் ஈடுபடுவதற்கான சிறப்பு வாய்ப்புகள் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் அரசாங்க ஆதரவு நடவடிக்கைகள் குறித்து தூதுவரிடம் விளக்கமளித்தார்.

மேலும், தொழில்நுட்ப மற்றும் கல்வி பரிமாற்றம், கடல்சார் ஆராய்ச்சி ஒத்துழைப்பு, இளம் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான பயிற்சி வாய்ப்புகள் ஆகியவையும் கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் பி.கே. கோலித்த கமல் ஜினதாச, சவூதி தூதரகத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இத்தகைய இருதரப்பு ஒத்துழைப்புகள் இலங்கையின் கடல்சார் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நீடித்த கடல்வள மேலாண்மைக்கும் புதிய வழிவகை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X