2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சக்தி ஆலயங்களில் சேமிக்கப்பட்டுள்ள சேலைகளை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க கோரிக்கை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள சக்தி ஆலயங்களில் நேர்த்திக்கடன் பொருட்டு மக்களால் வழங்கப்பட்ட நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சேலைகளை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மட்டு. மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் இந்து ஆலயங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களிலுள்ள காளி அம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், கண்ணகி அம்மன், துரோபதை அம்மன் போன்ற ஆலயங்களிடம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனினாலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த ஆலயங்களின் தர்மகர்த்தாக்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இந்து சமயம் 'சனாதன தர்மம்' எனவே இந்து ஆலயங்களின் நிதிகள், சொத்துக்களை பொதுமக்கள் பாதிக்கப்படும் போது அவர்களின் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தல் மிகவும் அவசியமானதாகும். எனவே சகல இந்து ஆலயங்களும் சமூகசேவை நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனவும் ஆலய நிதியில் குறைந்தது 5 வீதமாவது இச்சமூக சேவைக்கு
பயன்படுத்தப்பட வேண்டும்.

தங்கள் கிராமங்களில் அம்மன் ஆலய சேலைகளை வறிய மக்களுக்கு வழங்க முடியாவிடில் வேறு கிராமங்களில் மிகவும் வறிய நிலையில் அனர்த்த பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து அம்மன் ஆலயங்களில் நேர்த்திக்காகவரும் ஆடு, கோழி, மாடு போன்றவை ஏலத்தில் மறுநாளே விடப்பட்டு நிதியாக சேகரிக்கப்படுகின்றது. இந்நிலையில் சேலைகள் மக்கள் பாவனைக்கு வழங்கப்படாது கறையான் அரிக்கும் நிலைக்கு பொட்டகங்களில் பூட்டி பாதுகாக்கப்படுகின்றன.

பாதிக்கப்படும் மக்களுக்கு சேலைகளை வழங்க முடியாவிடில் மட்டக்களப்பு
மாவட்ட இந்து இளைஞர் பேரவையிடம் அவற்றைக் கையளிக்க வேண்டும். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களை சமூகசேவை நடவடிக்கைக்கு உட்படுத்துவதே எமது நடவடிக்கை. இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இந்து ஆலயங்களில் இருந்து அனர்த்த பாதிப்புக்கான உதவிகள் கிடைக்கும் போது எமது மாவட்டத்தில் உள்ள நிதிவளம் கூடிய இந்து ஆலயங்கள் ஏன் உதவ முடியாது?

ஆலய தர்மகர்த்தாக்களின் கடமை வெறுமனே ஆலயங்களை புனரமைப்பது, பூசைகளை ஒழுங்கமைப்பது மாத்திரமல்ல ஆலயங்கள் மூலம் சமூகத்துக்கு சேவை வழங்குவதும் இன்றியமையாதது என்பதை குறிப்பிட்டதுடன் லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியம் இதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், லண்டன் சிவன் ஆலயம், லண்டன் கணபதி ஆலயம், லண்டன் உயர் வாசல் குன்று முருகன் ஆலயம், லண்டன் நாகபூசனி அம்மன் ஆலயம், லண்டன் கற்பக விநாயகர் ஆலயம், லண்டன் சிவயோகம் முத்துமாரியம்மன் ஆலயம், சுவிஸ்லாந்து
நவசக்தி விநாயகர் ஆலயம், கனடா ஐயப்பன் ஆலயம் போன்றவை எமது இலங்கை திருநாட்டில் அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பெரிதும் உதவி புரிந்து வருவதுடன், வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்களை செயற்படுத்தியும் மற்றும் சிறுவர் பராமரிப்பகம், முதியோர் பராமரிப்பகம் உட்பட்ட பலசேவை நிலையங்களை ஏற்படுத்தியும், சுயதொழில், கல்விசார் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இவற்றை பார்வையிட்டு எமது நாட்டின் இந்து ஆலயங்களும் சமூக சேவை நடவடிக்கைகளில் இயன்றவரை பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்' என்று அவர் அக்கடிதங்களில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--