Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 23 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
வடகிழக்கில், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஜனநாயகத்துக்குக் குரல் கொடுக்கும் ஏனைய சக்திகளையும் பாதுகாக்க வேண்டியது தமிழ் பேசும் மக்களின் கடமையாகும். எதிர்காலத்தில் நிகழப்போகும் இப்படிப்பட்ட அத்துமீறல்களை தடுத்து நிறுத்த எதிர்ப்பைத் தெரிவிக்கவும் அனைத்துச் சக்திகளும் ஒன்று திரளுங்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அளவெட்டி வன்முறைச் சம்பவத்திற்கு எதிராக யாவரும் அணிதிரள்வோம் எனத்தலைப்பிட்டு வெளியிட்டுள்ள பகிரங்க கடிதமொன்றிலேயே அவர் இவ்வாறான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் ஜனநாயகச் சூழலையும், சமாதானத்தையும், ஏற்படுத்திவிட்டோம். சிறுபான்மையின மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினையையும் தீர்க்கப்போகிறோம். இப்படியெல்லாம் கூறிக்கொண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் வருகிறது அரசாங்கம்.
ஒருபக்கம் இதே தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்க முற்படுவதும், மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் வழங்குகின்றோம் எனச் சொல்லிக்கொண்டு, இராணுவ ரீதியான நிர்வாகத்தை மேலோங்கச் செய்வதும், 13ஆவது திருத்தச்சட்டத்துக்குக் கீழ் தீர்வை வழங்கத் தயார் என்று சொல்லிக் கொண்டு காணி, பொலிஸ் அதிகாரத்தை வழங்க மறுக்கும் செயல்களிலும், பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம் எனச் சொல்லிக் கொண்டு மறைமுக இன்னொரு பயங்கரவாத வன்முறைக்குத் தூபமிடுவதும், நல்லாட்சி முறையை வடக்கு கிழக்கு ஏற்படுத்தாது.
அரச பயங்கரவாதம் அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இத்தாக்குதலால் அரசு வெறும் பாசாங்குடன் செயற்படுகிறதா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் இடையே தோன்றியுள்ளது. யாழ்ப்பாணம் நூற்றுக்கு நூறு வீதம் கடற்படை, விமானப்படை, தரைப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை உட்பட பலதரப்பட்ட புலனாய்வுத்துறைகளையும் உள்ளடக்கி பல ஆயிரக்கணக்கான படைபலத்துடன் பரிபூரண கட்டுப்பாட்டில் உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், யாழ். அளவெட்டியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா உட்பட பல தலைவர்கள், கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது வன்முறைக் கும்பல் ஒன்று அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது.
இச்சம்பவமானது அரச பயங்கரவாதத்தை நிலைநிறுத்தியுள்ளது. இதேவேளை ஜனநாயக சக்திகளுக்கு அரச பயங்கரவாதத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே மக்கள் கருதுகின்றனர். நீண்ட நெடிய 30 வருடகால யுத்தத்தின் தோற்றுவாய் அரசு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை வழங்காது. அதனை இராணுவ ரீதியில் ஒடுக்க நினைத்ததின் விளைவெனலாம்.
இதிலிருந்து பாடம் எதையும், இன்னும் அரசு கற்றுக்கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் இந்த நேரத்தில் எழுகிறது. இத்தகைய போக்கு தொடரும் பட்சத்தில் வன்முறைகள் தோன்றுவது நிச்சயம். அப்போது இதற்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்றாக வேண்டும்.
இதனை எதிர்பார்த்துத்தான் போலும் அரசு இராணுவ முஸ்தீபுகளிலும் விஸ்தரிப்புகளிலும் வடகிழக்கில் ஈடுபட்டு வருகிறதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. ஏனைய ஜனநாயக சக்கதிகளுக்கும் ஒரு மறைமுகமான அச்சுறுத்தல் விடுப்பதாக இச்சம்பவம் அமைந்துள்ளது. இவ்வாறான வன்முறை நோக்கிய செயற்பாடுகளை விடுத்து இன்றைய உலகளாவிய மனித உரிமை நடைமுறைகளுக்கு இசைவாக நடந்தால் மாத்திரமே ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்பலாம் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
சர்வதேச நாடுகளின் அழுத்தம், தமிழ் நாட்டு மக்களின் அதிருப்தி, ஐக்கிய நாடுகளின் நெருக்கடி போன்றவற்றை நியாயப்படுத்துவதாக அரசின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது. எனவே வடகிழக்கில், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஜனநாயகத்துக்குக் குரல் கொடுக்கும் ஏனைய சக்திகளையும் பாதுகாக்க வேண்டியது தமிழ் பேசும் மக்களின் கடமையாகும்.
எதிர்காலத்தில் நிகழப்போகும் இப்படிப்பட்ட அத்துமீறல்களையும் தடுத்துநிறுத்தவும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் அனைத்துச் சக்திகளையும் ஒன்று திரளுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
47 minute ago
54 minute ago
22 Apr 2021