2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

புதிய மதுபான சாலையை எதிர்த்து கூட்டமைப்பு மாவட்ட செயலருக்கு கடிதம்

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார, கோவிந்தன் கருணாகரம் மற்றும் ஞா. கிருஷ்ணபிள்ளை ஆகியோர் மாவட்ட செயலாளருக்கு கடிதத்தில் அனுப்பியுள்ளர்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் புதிதாக மதுபான விற்பனை நிலையமொன்றை திறப்பதற்கு தனியார் வர்த்தகரொருவர் தொடர்ந்தும் முயற்சிகளையும் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

இது தொடர்பாக குறித்த பிரதேச மக்களினாலும் பொது அமைப்புகளினாலும் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் ஏற்கனவே ஐந்து மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆறாவது மதுபான விற்பனை நிலையமொன்று திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் சில வாரங்களுக்கு முன்பு ஆர்பாட்ட பேரணியொன்றை நடத்தினர்.

இதன்போது, பிரதேச செயலாளரிடம் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் மகஜர் கையளித்ததையும் தாங்கள் அறிவீர்கள். குறித்த விடயம் தொடர்பாக கடந்த வருடம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த ஆண்டு நடைபெற்ற மண்முனைப்பற்று அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த பிரதேசத்தில் புதிதாக மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதியளிப்பதில்லை என தீர்மானங்கள் எடுக்கப்பட்டதையும் இவ்வேளையில் சுட்டிக்காட்டுகின்றோம். மேலும் இந்த பிரதேசம் கடந்த கால யுத்தம், சூறாவளி, மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது.

இன்றைய சூழ்நிலையில் தொடர்ந்தும் மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதியளிப்பது மது பழக்கத்திற்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
இந்நிலையில் அந்த பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளினால் முன்வைக்கப்பட்;ட கோரிக்கைகளின் பேரிலும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் கவனத்தில் கொண்டு, புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்".

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .